தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படமானது,ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரித்தனர்.
தி கோட் திரைப்படம் ரிலீஸான முதல் நாள் இந்தியாவில் ரூ.44 கோடி வசூல் செய்தது. அதன்படி, தமிழில் ரூ.39.15 கோடியும், இந்தியில் ரூ.1.85 கோடியும், தெலுங்கில் ரூ.3 கோடியும் என மொத்தமாக 44 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த இந்த படம் தற்போது வரை ரூ. 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனை தி கோட் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் ‘தி கோட்’ திரைப்படமானது, இன்று ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.
இதில் விஜய் அர்ச்சனாவுக்கு கேக் ஊட்டி விடும் காட்சியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.