ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் மூலம் பிரபலமான டிஜிட்டல் நட்சத்திரம் விக்கல்ஸ் விக்ரம், தற்போது ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விக்கல்ஸ் விக்ரமுடன் ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்ய, சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது; சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய விக்கல்ஸ் விக்ரம், தனது பயணத்தை நினைவுகூர்ந்து, “2016ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்டாக தொடங்கிய நான், சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானேன். பிக் பாஸ் நிகழ்ச்சி எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. முன்பு ஒரு ‘கன்டென்ட்’ ஆகவே பார்க்கப்பட்ட நான், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல குடும்பங்களில் ஒருபிள்ளையாக மாறினேன். ரசிகர்கள் காட்டும் அன்பும், உரிமையும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது” என்றார்.
மேலும், சமூக வலைதளங்களில் வைரலான ‘நிலவை கொண்டு வா’ ரீல்ஸ் தனது வாழ்க்கையை மாற்றிய தருணமாக இருந்ததையும் அவர் பகிர்ந்தார். அந்த வீடியோவை பலரும் பாராட்டியதோடு, இசையமைப்பாளர் தேவா நேரடியாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தது தன்னைக் கண்கலங்க வைத்ததாகவும் கூறினார்.
சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டநாளாக இருந்ததாக தெரிவித்த விக்ரம், “அதை வெளியில் சொல்ல கூட வெட்கப்பட்டேன். ஆனால் இன்று அந்த கனவு நிஜமாகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் கே.சி. குருவுக்கு நன்றி” என்றார்.
இப்படத்தின் தலைப்பு ‘லைட் வெயிட் பேபி’ என அறிவிக்கப்பட்டது. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனும், ஒரு பெண் பாடி பில்டரும் இடையே நடைபெறும் காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இயக்குநர் கே.சி. குரு, “இது வாழ்க்கையின் சமநிலையைப் பற்றி பேசும் கதை. ‘லைட் வெயிட்’ என்ற கருத்து எப்படி கதையில் பிரதிபலிக்கிறது என்பதே படத்தின் முக்கிய அம்சம்” என்று குறிப்பிட்டார்.
நடிகை ஆர்த்தி கிருஷ்ணா, “இது என் முதல் படம். இப்படத்தின் மூலம் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
இவ்வாறு புதிய முயற்சியுடன் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.