முதலில் நடிகர் சங்கத்தை ஒழுங்கு படுத்துங்கள் விஷால் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம் நன்மைக்குத்தான் என்று கூறியுள்ளார்.

கேரள திரையுலகம் இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேரளா திரையுலகின் மானமே போய்விட்டதாக கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், இதற்காக பெண்கள் வாய்மூடி சும்மா இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவில் ஒரு முடிவிற்கான துவக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் உள்ளதாகவும் காவல்துறையிலும் இதுபோன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இது போன்ற பிரச்சனைகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ் இண்டஸ்ட்ரியிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் விஷால் இந்த விஷயத்தில் குரல் கொடுத்துள்ளது குறித்து பேசியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், முதலில் அவர் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது பெண்கள் நடிகர் சங்கத்தை அணுகுவதற்கு தயக்கமும் அச்சமும் காட்டுவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.