ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
சிறு வயதிலேயே தாயும் தந்தையும் பிரிந்து விட்டதால் காதல், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்று எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் ரியோ. இன்னொரு பக்கம் இவை அனைத்திலும் நம்பிக்கையுடன் இருக்கும் கோபிகா. இவர்கள் இருவருக்கும் காதல் வருகிறது கல்யாணம் என்ற பேச்சை எடுத்த உடனே வழக்கம் போல் சண்டையில் முடிகிறது. பிரேக்கப் என்று சொல்லும்போது கோபிகா கருத்தரிக்கிறார். இந்த கருவை அழிப்பதா..? இல்லை அதை வைத்து குடும்பம் நடத்துவதா என்று முடிவு எடுப்பதற்கு பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இறுதியில் என்ன ஆனது என்பது தான் ஸ்வீட் ஹார்ட் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் இதற்கும் முன்னாலேயே ‘பப்பி’என்ற ஒரு படத்தில் வந்த அதே கதையை தான், பிச்சுபோட்ட இட்லியை மாற்றி மாற்றி ஒட்ட வைத்து கொடுப்பது போல ஸ்வீட் ஹார்ட் என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு முறை சிக்கல்களை உளவியல் ரீதியாக பேசியிருந்திருக்கலாம். வசனரீதியாக மட்டுமே பேசியிருப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய தொய்வை கொடுக்கிறது.
Non linear screenplay என்ற பெயரில், கதையை குழப்பியதோடு மட்டுமல்லாமல், பார்க்கும் நம்மையும் குழப்பி எடுத்து விட்டார்கள். இதை சொல்லவா இத்தனை சுத்து சுற்ற வேண்டும். ( இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் ..!).
வசனத்திலாவது ஏதாவது ஈர்ப்பு இருக்கிறாரதா என்று பார்த்தால், அனைத்தும் அரைகுறை தகவலை வைத்து எழுதப்பட்ட வசனங்களாகவே தெரிகின்றன. குறிப்பாக கருக்கலைப்பு பற்றிய வசனங்கள் தெளிவாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை இறுதிக்காட்சியில் பலத்தை கொடுக்கிறது. பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி பெரிதாக ஜொலிக்கவில்லை.
ஒளிப்பதிவு அருமையாக இருந்தாலும் படக் காட்சிகளில் லாஜிக் மிஸ்டேக்ஸ் நிறைய இருப்பதால் ரசிக்கும் தன்மை குறைந்து விட்டது.
ஆக மொத்தத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் நெருக்கமான காட்சிகளையும், பப்பி படத்தின் கதை கருவையும் எடுத்து ஒரு திரை கதையாக உருவாக்கி அதை வெளியிட்டால் அந்த படத்திற்கு பெயர் ஸ்வீட் ஹார்ட்.