சுனில், வைபவ், ரெடின் கிங்ஸ்லி, சாந்தினி, நிஹாரிகா, பால சரவணன், முனிஸ் காந்த், தனலட்சுமி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில், கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஏற்கனவே சிங்கள மொழியில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தை தான் தமிழில் ரீமேக் செய்து இருக்கிறார் இளங்கோரம்.
கதைப்படி சுனில் வைபவ் ஆகிய இருவரும் பெருசு என்று கூறப்படும் அவரது அப்பாவான ஹலாசியத்தின் மகன்கள். ஊரில் மதிப்பையும் மரியாதையும் சேர்த்து வைத்திருக்கும் ‘பெருசு’ திடீரென இறந்து விடுகிறார். ஆனால் இந்த இறப்புச் செய்தியை வெளியே சொல்ல கூட முடியாத நிலைமையில், குடும்பம் தத்தளிக்கிறது. இந்த சிக்கலில் இருந்து அவர்கள் வெளியே வந்தார்களா, குடும்பமானம் வெளியே போகாமல் பார்த்துக் கொண்டார்களா என்பதை நகைச்சுவையாக கூறி இருக்கும் படம்.
இந்தப் படத்தில் வைபவை விட சுனில் நன்றாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். புதுமுகம் நிஹாரிகா நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும். தீபா ஷங்கரின் ஓவர் ஆக்டிங் இந்த படத்தில் இல்லை என்பது ஆறுதல்.
வித்தியாசமான கதையை யோசித்து இயக்குனர், திரைக்கதையிலும் அதே வித்தியாசத்தை கொடுத்திருந்திருக்கலாம். ஏனெனில் படம் தொடங்கிய உடனே கதைக்குள் சென்ற படம் முதல் அரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததற்கு பிறகு, அதே காட்சிகள் ரிப்பீட் மோடில் வரும் போது சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல் பிளஸ் காமெடி என்று வரும்போது அயர்ச்சியை உண்டாக்குகிறது. ஆகவே திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
இந்த படத்திற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் பாலாஜி ஜெயராமனின் வசனங்கள் அனைத்தும் கமலஹாசனுக்கு எழுத்தாளர் கிரேசி மோகன் எழுதும் வசனங்களை அப்படியே ஞாபகப்படுத்துகின்றன. ஆகவே வசனத்தில் கிரேசி மோகன் இன் தாக்கத்தை குறைத்து இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
ஒரு சின்ன வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை வைத்து அதில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் மிக நேர்த்தியாக கோணங்களை வைத்து படம் பிடித்த ஒளிப்பதிவாளர் சத்யா திலகத்திற்கு பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர் அருள் ராஜின் பின்னணி இசை நகைச்சுவை காட்சிகளுக்கு வலுவூட்டியது மாதிரி, பாடல்களுக்கு வலுவூட்டவில்லை என்பது உண்மை.
இயக்குனர் இளங்கோ ராம், சிங்களத்தில் எடுத்த அவரின் சொந்த படத்தையே தமிழில் எடுத்து இருக்கிறார். சிங்களத்தில் நிறைய அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாமல், குறியீடுகள் இல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுத்திருப்பது படத்தை பார்க்கும் போது நமக்கே தெரியும். ஆனால் இரண்டாம் பாதியில் அவ்வளவு இழுவை தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்தை குறைத்து இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பெருசு படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அடல்ட் படம் என்று சொன்னால் கூட, தமிழ்நாட்டு மக்கள் எத்தனை பேர் இந்த படத்தை முகம் சுளிக்காமல் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியே?