நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.
படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை (நவ.14) வெளியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சிவா, “கங்குவா திரைப்படம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு இயக்குநராக அனைத்து வகையான திரைப்படங்களையும் எடுக்க முடியும் என நம்புகிறேன். இதுவரை நான் என்ன படங்களை எடுக்க வேண்டும் என நினைத்தேனோ அவற்றைத்தான் இயக்கியிருக்கிறேன். அவை, வெற்றியும் பெற்றுள்ளன.
என் முந்தைய படங்களைப்போல கங்குவா படமும் மனித உறவுகளின் உணர்ச்சிகளை மையமிட்டே உருவாகியிருக்கிறது. இதில், மன்னிப்பை பேசியிருக்கிறோம். மிகச்சிறந்த திருப்தியான படத்தை எடுத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.