சின்னத்திரையில் தனது கலைப் பணியை தொடங்கி இன்று சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் கவின். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் இவர்.
சமீப காலங்களாக அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் பலத்த வெற்றியை அடைந்தன. இதில் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் அடக்கம்.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கும் படமான Bloody Beggar படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ரெடின் கிங்ஸ்லி, பிரியதர்ஷினி ராஜ்குமார் இன்னும் பல நட்சத்திரங்கள் அதில் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலான, Bloody Beggar டைட்டிலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அரசாங்கத்திற்கும் சென்சார் போர்டிர்க்கும் மின்னஞ்சல் மூலம் தனது புகாரை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் ஒற்றன் துரை.
அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாவது, அன்றாடம் வயிற்று பிழைப்பிற்காக பிச்சை எடுப்பவர்கள் தான் பிச்சைக்காரர்கள். அவர்கள் எவ்வளவோ கஷ்டப்படுகிறார்கள், அன்றாட உணவிற்காக பல இடங்களில் பிச்சை எடுக்கிறார்கள். ஆனாலும் இதைத் தெரிந்தும் இந்த படத்தின், படக்குழுவினர் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில், “Bloody Beggar ” என்று டைட்டில் வைத்திருப்பது அவர்களின் உணர்வை மேலும் புண்படுத்துகிறது.

இதனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சென்சார் போர்டு இந்த படத்தின் டைட்டிலை நீக்க வேண்டும் என்று, படக்குழுவினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த மின்னஞ்சல் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 30ஆம் தேதி இந்த படம் வெளிவர இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.