யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை – A R ரஹ்மான்!

1992 ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கி வெளியான ‘ ரோஜா’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். அதன் பின்னர் பல்வேறு மொழிகளில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான slumdog millionaire படத்திற்கு இசையமைத்து இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். தற்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு பாடல்களை வழங்கி வரும் ரஹ்மான் தற்போது வீக் நாளிதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது “இனியும் என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது நான் என்னுடைய படைப்பு சார்ந்த உள்ளுணர்வுகளை திருப்தி படுத்தும் படைப்புகளை மட்டுமே தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன்.நான் பல வருடங்களுக்கு முன்னதாக ஆஸ்கர் விருதுகளை வென்றேன். இப்போது யார் அதனை பற்றி அக்கறை கொள்கிறார்கள். யாரும் அதனை கண்டு கொள்வதில்லை..

நான் எனக்கு நெருக்கமான திரைப்படங்களில் பணியாற்றி, அடுத்த தலைமுறையை உத்வேகப்படுத்தக் கூடிய இசையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தற்போது என்னை நிரூபித்தே ஆக வேண்டிய அவசரம் இல்லை. வயது ஆக ஆக எனக்கு சகிப்புத் தன்மை குறைகிறது.

இரண்டு விஷயங்கள் என்னை எரிச்சலூட்டுகின்றன. அவை டைமருடன் கொண்ட செல்ஃபியும், என்னை தவறாக வழி நடத்திய இயக்குனர்களும்.. காரணம், அவர்கள் வித்தியாசமான வரிகளை பாடலில் நுழைக்கிறார்கள். அப்போது நான் இந்த பாடலை மேடையில் பாட முடியுமா என்ற கேள்வியை எனக்குள் கேட்பேன். பதில் இல்லை என்று வந்தால், அதனை நான் மறுப்பேன்.” என்று பேசினார்.

அண்மையில் வெளியான அயலான், லால் சலாம், ராயன், மலையாளத்தில் ஆடுஜீவிதம், இந்தியில் மைதான், அமர் சிங் சம்கீலா ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அடுத்ததாக ரஹ்மானின் இசையில் ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாக உள்ளன.

2010 ஆம் ஆண்டு வெளியான கொமரம் புலி படத்திற்குப் பிறகு, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோருடன் புச்சி பாபு சனாவின் படத்திற்கு இசையமைத்து தெலுங்கிற்கு கம் – பேக் கொடுக்கிறார். அதே போல தமிழில் தக் லைஃப், ஜெனி, காதலிக்க நேரமில்லை, மூன் வாக் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்தியில் சாவா, லாகூர் 1947, தேரே இஷ்க் மெயின், ராமாயணம் மற்றும் கமல் அவுர் மீனா ஆகிய படங்களில் பணியாற்றிவருகிறார். அத்துடன் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரியின் மௌனப் படமான காந்தி டாக்ஸ், சேகர் கபூரின் எபோனி மெக்வீன் ஆகியவற்றிற்கும் அவர் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.