பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியை கைவிட 5 கோடி ரூபாய் கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சல்மான் கானை கொலை செய்ய சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியது தெரியவந்தது. இந்த நிலையில், வியாழனன்று, மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், “சல்மான் கான் உயிருடன் இருக்கவும், லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) உடனான பகையை முடிவுக்கு கொண்டு வரவும் விரும்பினால், 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“பணம் கொடுக்காவிட்டால், கடந்த வாரம் கொல்லப்பட்ட பாபா சித்திக்-யை விட சல்மான் கானின் நிலை மோசமாக இருக்கும்” எனவும் “இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சல்மான் கானின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் நடிகர் சல்மான் கான் துபாயில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு புல்லட் புரூப் எஸ்.யூ.வி. காரை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.