இளைய திலகம் பிரபு, வெற்றி, லிவிங்ஸ்டன், RV உதயகுமார் ராஜதுரை இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் புதுமுக இயக்குனர் மகா கந்தன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
90களில் நடக்கும் கதையில் ஊரில் மதிப்புடையவராக இருக்கிறார் செல்லையா (பிரபு). தன் மகன் பட்ட முத்துவை (வெற்றி) அதீத பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு காலத்தில் இருந்த குடும்ப சொத்துகள் எல்லாம் விவசாயம் பொய்த்ததால் கரைந்துவிட, பட்ட முத்து தன் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்க்கும் சட்டவிரோத செயலை (வரியைத் தவிர்க்க) செய்யும் லிங்காவிடம் (கோமல் குமார்) பணிக்குச் சேர்கிறார். அங்கு நடக்கும் ஒரு பிரச்னையால் வெற்றியின் வாழ்க்கையில் பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. அதை அவர் சமாளித்தாரா, அப்பா – மகன் பாசம் என்னவானது என்பது தான் ‘ராஜபுத்திரன்’ படத்தின் கதை.
திரைக்கதையை பொருத்தவரை பெரும்பாலான காட்சிகள் பார்த்துச் சலித்த டெம்ப்ளேட்களாகவும், சோதிக்கும் வகையறாக்களாகவும் இருக்கிறது. வெள்ளந்தி கிராம மனிதர்களை ஏமாற்றும் வில்லன் கேங், அதைத் தொடர்ந்து வரும் இறுதி ட்விஸ்ட் ஓகே ரகம் என்றாலும் யாருமே இந்த எளிய மோசடி குறித்து யோசிக்காமல் இருப்பதில் துளியும் லாஜிக் இல்லை. சரி, லாஜிக் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால்கூட, கள்ளுக்கடை கவர்ச்சிப் பாடல், வழக்கொழிந்துபோன காதல் காட்சிகள், அபத்தமான உருவக்கேலி காமெடிகள் என தமிழ் சினிமாவில் அடிச்சு துவைச்ச காட்சிகளோடு தான் நகர்கிறது படம்.
நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் வெற்றி இந்த தடவை கமர்சியல் படம் என்று ஒரு தவறான கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் நடிகர் பிரபு அவருக்கென்று ஒரு தனி கம்பீரம் இருக்கும். அதை உடைத்து இந்த மாதிரியான கதைகளில் தேர்ந்தெடுத்து நடிக்கலாமா?
இமான் அண்ணாச்சி, ராஜதுரை காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவும் சுமார் ரகம், படத்தின் இசை ரொம்பவே சுமார் ரகம்.
இந்தப் படத்தை இயக்குனர் 90 காலகட்டத்தை காட்டுகிறேன் என்ற பெயரில், ஒரு கமர்சியல் படத்தை எடுக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் அதில் வெற்றி பெற்றாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆக மொத்தத்தில் ராஜபுத்திரன் படம் எப்படி இருக்கிறது என்றால், பாசக்கதையில் அதீத செயற்கைத்தனமும், புதிதாக எதுவுமில்லாததும் ஏமாற்றம் தருவதால் ஒரு முழுமையான திரை படமாக இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.