மாதவன், சித்தார்த், நயன்தாரா மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையில், Ynot ஸ்டுடியோஸ் சசிகாந்த் இயக்கத்தில் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கும் படம்.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படத்தின் கதைக்கரு.
பெரிய சயின்டிஸ்ட் ஆக போராடும் மாதவன், ஆசைக்காக ஒரு குழந்தை என்று சாதாரண வாழ்க்கை வாழ விரும்பும் நயன்தாரா, குடும்பத்தைக் கூட பார்க்காமல் கிரிக்கெட்டையே வாழ்க்கையாக நினைக்கும் சித்தார்த் இவர்கள் மூவரது வாழ்க்கைப் பயணமும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச் மூலமாக இன்னொரு முகமாக மாறுகிறது. அதனால் இந்த மூன்று பேரும் நடிப்பின் உச்சத்தை தொட்டு நடித்து இருக்கிறார்கள். கூடுதலாக மீரா ஜாஸ்மின் நடிப்பு மிகவும் யதார்த்தம்.
தமிழில் கிரிக்கெட் பின்னணியில் வந்த படங்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. ஆனாலும் இந்த படத்தின் திரைக்கதை அதை சற்று யோசிக்க வைக்கிறது. காரணம் படம் 3 மணி நேரம் ஓடும் மிக நீளமான திரைக்கதை. மிக மெதுவாக நகரும் திரைக்கதை. நமக்குள் இருக்கும் பொறுமையை கொஞ்சம் சோதிக்க தான் செய்கிறது. நல்ல கதையை திரைக்கதையாக எடுக்கும் பொழுது சில இடங்களில் வணிக ரீதியான சினிமாவை சமரசம் செய்ய வேண்டியது கட்டாயம் தான்.ஆனால் முழுக்க முழுக்க டாக்குமென்டரி ஃபீலில் ஒரு படம் எடுத்தால் யாருக்கும் பிடிக்காது என்பதும் உண்மைதான்.
படத்தின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமாக இருந்தாலும் சக்தி ஸ்ரீ கோபாலனின் இசை படத்திற்கு பெரிதாக பலம் சேர்க்கவில்லை.
இந்த படத்தின் இயக்குனர் சசிகாந்த் இந்த கதையை பன்னிரண்டு வருடத்திற்கு முன்பே எழுதி விட்டதாக நிறைய நேர்காணல்களில் கூறியிருந்தார். ஒருவேளை இந்த கதையை அப்பொழுது எடுத்திருந்திருக்கலாமோ என்னவோ?
என்ன இருந்தாலும் அவர் செய்த மிகப்பெரிய தந்திர வேலை படத்தை ஓடிடியில் வெளியிட்டது.
ஆக மொத்தத்தில் டெஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் test யாருக்குத் தான் என்று தெரியவில்லை?