இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த எல்2 எம்புரான் திரைப்படம், மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது.
Sacnilk வெளியிட்ட தகவல்களின் படி, இந்தப் படம் 9 நாட்களில் உலகளவில் 241.65 கோடி ரூபாய் வசூல் செய்து, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வசூலை முறியடித்து, மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
ஆம், 9 நாட்களில், எல்2 எம்புரான் இந்தியாவில் 106.65 கோடி ரூபாய் (gross) வசூல் செய்த நிலையில், வெளிநாடுகளில் 135 கோடி ரூபாய் வசூலித்ததாக குறிப்பிட்டு இருக்கிறது Sacnilk தளம்.
இதன் மூலம் உலகளவில் எம்புரான் திரைப்படம் 241.65 கோடி வசூல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் கடந்த 2018ம் ஆண்டு யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் வாழ்நாள் சாதனையான 238 கோடி ரூபாயை எம்புரான் கடந்து இருக்கிறது.
கதை சார்ந்த படங்களுக்கு பெயர் பெற்ற மலையாள சினிமா, பெரிய அளவில் வசூல் செய்ய போராடி வந்தது. 2023 ஆம் ஆண்டு வெளியான 2018 படம் உலகளவில் 180 கோடி ரூபாய் வசூலித்ததும், மஞ்சும்மல் பாய்ஸ் 240 கோடி ரூபாய் வசூலித்ததும்தான் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூல் செய்த படமாக இருந்தது.
ஆகையால், எல்2 எம்புரான் 9 நாட்களில் 241.65 கோடி ரூபாய் வசூலித்தது என்பது அசத்தலானது மட்டுமல்ல. இது மேலும் புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது என்பதையும் குறிக்கிறது. ஆனால், கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் கேஜிஎஃப் சாப்டர் 2, பாகுபலி 2, புஷ்பா 2, ஆர்ஆர்ஆர் மற்றும் கல்கி 2898 ஏடி போன்ற 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த படங்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் கடைசியாக 2.0 படம் 723 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கிறது.