மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார். இதில் அஜித் உடல் எடையை குறைத்து வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்துள்ளார். அந்த கெட்டப்பில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
முன்னதாக இப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியை விடாமுயற்சி படத்துக்கு விட்டுக்கொடுத்து இந்த படம் தள்ளிப்போனது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியானது. ஒரு மிரட்டலான டீசரின் மூலம் இந்த தகவலை படக்குழு வெளியிட்டனர். இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் குட் பேட் அக்லி படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, சுனில் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.