தம்பி ராமையா,சமுத்திரக்கனி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், தம்பி ராமையா கதை மற்றும் இசையமைப்பில், உமாபதி ராமையா இயக்கி இருக்கும் படம்.
இந்தப் படம் எடுக்கும் போதே தமிழ்நாட்டில் சர்ச்சையை கிளப்பிய ஜீவஜோதி பிரச்சினையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறது என்று பேசப்பட்டது. ஆனால் படம் முடிந்து பார்க்கும் போது அதன் ஒரு சிறு துளி கூட பெரிதாக இல்லை என்பது தான் உண்மை.
மிகப்பெரும் செல்வந்தராக இருக்கும் தம்பி ராமையாவை அவரது மனைவியே சாபம் விடுகிறார். இதனால் வெறுத்துப் போன தம்பி ராமையா இரண்டாவது மனைவி வைத்துக் கொள்கிறார். அது பத்தாது என்று மூன்றாவதாகவும் ஒரு பெண்ணை பார்ப்பதால், அந்தப் பெண்ணின் மூலமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி விடுகிறார். இதனால் அவராவது கௌரவம், அந்தஸ்து, பணம், மரியாதை அனைத்தையும் இழந்து பிச்சைக்காரராக சுற்றுகிறார். இப்படி பிச்சைக்காரராக இருக்கும் தம்பி ராமையா செய்தது உண்மையிலேயே குற்றமா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதைக்குரு.
தம்பி ராமையா ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் நடிப்பை கொண்டு வர வேண்டும் மெனக்கிட்டு இருக்கிறார். ஆனால் எம் ஆர் ராதா, எம் ஆர் ராதா தான். சமுத்திரக்கனி வழக்கம் போலவே அன்பு நேர்மை என்று பாடம் எடுக்காமல் நடித்திருக்கிறார், ஒரு ஆறுதல். படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக நடித்திருக்கின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதை. இது தம்பி ராமையாவிற்கு ஏற்ற கதைதானா என்பது அடுத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன. இதற்கு எல்லாம் அடித்தளம் போட்டது எம் ஆர் ராதாவின் ரத்தக்கண்ணீர் படம். அது கொடுத்த வலியை விடவா இந்த படம் கொடுத்து விடப்போகிறது.
அதற்குப் பிறகு இந்தப் படத்தின் இசை, பெரிதாக ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவு நேர்த்தியாக இருந்தாலும் திரைக்கதை சரியில்லாத காரணத்தினால், நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கின்ற காரணத்தினால் ரசிக்க முடியவில்லை.
தம்பி ராமையா என்றாலே மைனா படம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் இது தேவையா? எங்களைப் பொறுத்தவரை தம்பி ராமையா இந்த மாதிரியான ஒரு கதை களத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் ராஜா கிளி ஒரு வெட்டுக்கிளி.