கூட்ட நெரிசலில் பெண் மரணம்: அல்லு அர்ஜுனின் வீடு சூரையாடல்!

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும், அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர் என்றும் அதில் அந்தப் பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை(டிச. 13) அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிகப்பட்டார்.

இந்நிலையில் ஒஸ்மானியா பல்கலைக்கழக செயற்குழுவை சேர்ந்த உறுப்பினர்களாகக் கருதப்படும் சிலர், ஹைதராபாத்திலுள்ள அல்லு அர்ஜுனின் வீட்டின் முன்பு இன்று(டிச. 22) திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறீர்கள்; ஆனால் அவற்றைக் காண வருவோர் சாக வேண்டுமா?’ என்ற வாசகத்துடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இதனிடையே, அல்லு அர்ஜுன் மீதான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக அவரது வீட்டின் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்ற சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்தும் வீட்டின் மீது கல் வீசி எறிந்தும் தாக்குதல்களை நடத்தியதால் சலசலப்பு உண்டானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு தெலுங்கு திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.