விடுதலை 2 திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் கௌதம் மேனன், ராஜீவ் மேனன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம். இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் விடுதலை 1 கொடுத்த வெற்றி.

முதல் பாகத்தில் இருந்தே சூரி தன் அம்மாவிற்கு கதை சொல்லுவது போல், அந்தப் படம் அமைந்தது. அதன் நீட்சியாக தான் இரண்டாம் பாகமும் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதியை முதல் பாகத்தில் பிடித்துக் கொடுத்த சூரியின் மூலமாக , விஜய் சேதுபதி ‘வாத்தியார் ‘பெருமாள் எப்படி உருவானார்? அவர் எதற்காக போராடுகிறார் என்பதை மையமாக வைத்து சொல்லப்படுகின்ற கதைதான் இது.

விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் ராஜீவ் மேனன், கௌதமேனன் டானாகாரன் தமிழ் ஆகியோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் எல்லாத்தையும் விட ஒரு படி மேலே நடிகர் சேத்தன் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். தினம் தினமும் பாடலும் சரி, மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு பாடலும் சரி ராஜாவின் தாலாட்டு பாடல்களில் முதன்மை வகிக்கும்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மிக அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார், எடிட்டர் ராமர் சிறந்து விதத்தில் எடிட்டிங் செய்துள்ளார்.

படத்தில் குறையாக பார்க்கப்படுவது திரைக்கதை மட்டுமே. முதல் பகுதி கம்யூனிசம் என்று படத்தைச் சொல்லாமல் பாடத்தைச் சொல்கிறது. அது ரசிகர்களுக்கு ஒரு சலிப்பையே கொடுக்கிறது. ஆனால் இரண்டாம் பகுதி கதையை நோக்கி நகர்ந்தாலும், இறுதிக்காட்சி அனைவரையும் கைதட்ட வைக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கு உண்டான ஒரு வித்தியாசமான கதை களத்தைக் கொண்டிருப்பார். ஆனால் இந்த படத்தில் ஏனோ மிஸ்ஸிங். வெறும் வாத்தியார் கதையை மட்டுமே சொல்லாமல், சில சில கிளை கதைகளை சொல்லி, யாருடைய கதையை பார்ப்பது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் அலெக்ஸ் வேலி எழுதிய வேர்கள், ஓநாய் குலச் சின்னம் மற்றும் மண்டேலா ஆகியோரது நாவல்களை அடிப்படையாகத் தழுவி ஒரு அரசியல் களத்தில் இந்த கதையை எடுத்திருக்கிறார். இதற்கு கூடுதலாக 1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அரியலூர் பகுதிகளில் வாழ்ந்த நக்சல் பாரியான கலிய பெருமாளின் வாழ்க்கையும் கோர்வையாக சேர்த்துள்ளார்.

இப்படி பல கதைகளை உள்ளே புகுத்தியதால், படம் படமாக இல்லாமல் சற்று பாடமாக தெரிவது சற்று கவலையை அளிக்கிறது.

விடுதலை 2 அனைவரும் பார்க்கக்கூடிய அரசியல் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு படம்.