Family படம் திரை விமர்சனம்

உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, மோகனசுந்தரம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

இந்தியா முழுவதும் புஷ்பா 2 படம் வெளியாகி, இதனால் பல திரைப்படங்கள் வெளியிடுவது தள்ளிப்போன இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

அண்ணன் தம்பி மூன்று பேர், அம்மா அப்பா, தாத்தா என்று ஒரு அழகான குடும்பம். அண்ணன் வக்கீல், இன்னொரு அண்ணன் நைட்ஷிப் கால் சென்டரில் வேலை செய்யும் ஐடி ஊழியர், கடைசி தம்பி டைரக்டராக முயற்சி செய்யும் கதையின் நாயகன்.

கதை திருட்டு என்று சொல்லக்கூடிய தனது கதாநாயகனின் கதையை தயாரிப்பாளர் தனது கதையாக எழுதி வாங்கிக் கொண்ட, பின் ஒன்றும் செய்ய முடியாமல் ஹீரோ தவிக்கும் நேரத்தில் அந்தக் குடும்பமே ஒன்று சேர்ந்து அவர் படம் எடுப்பதற்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதுதான் ஃபேமிலி படம் படத்தின் கதை கரு.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது கதாபாத்திரத்தின் நேர்த்தியை உணர்ந்து நடித்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக விவேக் பிரசன்னா இதற்கு முந்தைய படங்களில் நடித்த நடிப்பை விட ஒரு படி மேலே போய் நடித்திருக்கிறார்.

சினிமா சார்ந்த படம் என்பதால், கதாநாயகன் படும் கஷ்டம், துன்பம் என்பதற்காக வெறும் அழுகை காட்சியிலேயே மட்டுமே கதையை காமிக்காமல் கலவையாக காமிச்சது அருமை. குறிப்பாக அஜித் நடித்த முகவரி படத்தின் சாலில் வந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டு இந்த படத்தை எழுதி இருக்கிறார் என்றே தோன்றும்.

இந்த படத்தின் இயக்குனருக்கு ஏதோ ஒரு தயாரிப்பாளரால் மிகப்பெரிய சோதனை நடந்துள்ளது என்பதை இந்த படத்தின் மூலம் நம்மாலும் உணர முடியும்.

முதல் பகுதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைந்து தான் இந்த படத்தின் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சினிமா சார்ந்த கதைகள் வெளிவந்து ஜெயிப்பது என்பது மிகவும் அரிது. ஆனால் இந்தப் படத்திற்கு ஜெயிக்க கூடிய அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனால் இந்தப் படம் ஜெயிக்குமா என்றால் மிகப் பெரிய கேள்விக்குறியே, காரணம் திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சனை, FDFS க்கு திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதி இல்லாதது என்று பல காரணங்கள் உள்ளன.