இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா 2 படம், பான் இந்தியா படமாக வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 800 தியேட்டர்களில் புஷ்பா ரிலீஸாகிறது. இந்திய சினிமா படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஐமேக்ஸ் திரைகளிலும் புஷ்பா 2 வௌியாக உள்ளது.
தெலுங்கில் டாப் நடிகர்கள் நடித்த புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு வாரத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் அனுமதி தருகின்றன. பாகுபலி படம் வெளியானது முதல் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அதன்பின் ஒவ்வொரு பான் இந்தியா படம் அல்லது டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
வரும் 5ம் தேதி வெளியாகும் புஷ்பா 2 படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வை தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்சமாக 150 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்சமாக 200 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணமாக 800 ரூபாய் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கட்டண உயர்வு மிக மிக அதிகம் என ரசிகர்கள் மத்தியில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 350 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 590 ரூபாய் என புஷ்பா 2 படத்துக்கான கட்டணம் இருக்கிறது. இதற்கு முன்பு வெளியான பிரம்மாண்ட திரைப்படமான கல்கி 2898 ஏடி படத்திற்கு கூட இந்த அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் கல்கி 2898ஏடி படத்தின் பட்ஜெட் புஷ்பா 2 படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தது.
இவ்வளவு அதிகமாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி விட்டு முதல் நாளிலேயே 100 கோடி, 200 கோடி ரூபாய் என தெலுங்கு திரையுலகினர் அதை வசூல் சாதனை என்று சொல்வது மிகவும் பொருத்தமற்றது என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் டிக்கெட் விலை இப்படி 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக இருந்தால் மிக எளிதாக ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என படம் வசூலிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
புஷ்பா 2 படத்துக்கு தெலுங்கானா அரசு டிக்கெட் கட்டணம் உயர்வு குறித்து அரசாணை வெளியிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் ஆந்திர மாநில அரசு இன்னும் அதுகுறித்த அரசாணையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புஷ்பா 2 படத்துக்கான டிக்கெட் கட்டணம் இப்படி தாறுமாறாக உயர்த்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த விரக்தியை ஏற்படுத்தி உள்ளது