வேற மொழி படங்கள் நடிப்பு : சரியான பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்!

டாக்டர், மாவீரன், அயலான், அமரன் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் சினிமா மொழி மாறியிருக்கிறது. அடுத்த விஜய் என்று சொல்லப்பட்ட சிவகார்த்திகேயன், நிச்சயம் அவரது இடத்தை எதிர்காலத்தில் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லும் அளவுக்கு அமரன் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். உலகம் முழுவதும் அமரன் படம் இதுவரை ரூ. 325 கோடி வசூலித்துள்ளது. வருகிற 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அமரன் படம் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் கிடைத்த அமோக ஆதரவு, ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனிடம், பிற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த மொழிகளிலும் நடிப்பீர்களா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வரும்போது இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் நடிக்க போகிறோம் என்று தெரியாமல்தான் வந்தேன். அடுத்த விநாடி இந்த உலகம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் என்று சொல்வது போல், அமரன் போன்ற ஒரு படத்தை நினைத்து சினிமா இன்டஸ்ட்ரிக்குள் நான் வரவில்லை.

வேற மொழியில் நான் நடிக்கப் போகிறேனா என்பது எதுவும் நம்ம கையில் கிடையாது. அமரன் மாதிரியான படத்தை பார்த்துவிட்டு எந்த டைரக்டருக்கு எந்த மாதிரியான ஐடியா வரப்போகுது என்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை. நான் வெளிப்படையாக சொல்கிறேன். வேற மொழியில் நடிக்க வாய்ப்பு வந்தால், அந்த மொழியை சரியாக கத்துக்கிட்டு போய் நடிக்கணும். அப்போதுதான் கான்பிடண்ட் ஆக சரியாக நடிக்க முடியும், என்று கூறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.