டிசம்பரில் கோவாவில் கல்யாணம்: உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமான ‘மகா நடி’ படத்தில் நடித்தார். இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி போலவே வாழ்ந்து காட்டினார். இதற்காக அவருக்கு சிறந்த தேசிய நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. இவர் தனது 15 ஆண்டுகால நண்பரை வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நண்பர் ஆண்டனி தட்டில் என்பதை உறுதி செய்திருந்தார். இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒரு பதிவை வெளியிட்டு, தனது வருங்கால கணவர் குறித்து அறிவித்தார். ஆண்டனி தட்டில், கேரளாவை சேர்ந்த பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவருக்கு கேரளா, தமிழ்நாடு, துபாய் ஆகிய இடங்களில் பல்வேறு ரிசார்ட்கள் உள்ளன. இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், அடுத்த மாதம் டிசம்பர் 11-ம் தேதி இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையானை தனது தாயார் நடிகை மேனகா, தந்தை சுரேஷ் மற்றும் குடும்பத்தாருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு தேவஸ்தானத்தினர் தரிசன ஏற்பாடுகளை செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதனை தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் பேட்டரி வாகனத்தில் ஏறி செல்கையில், அங்குள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ‘தான் நடித்துள்ள ‘பேபி ஜான்’ எனும் இந்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது வெற்றி படமாக அமைய வேண்டும். மேலும் எனக்கு அடுத்த மாதம் டிசம்பரில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பதால் ஏழுமலையானை பிராத்திக்க வந்தேன்’ என தெரிவித்தார்.