சந்தடி கேப்பில் ரஜினிக்கு குட்டு வைத்த விஜய்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், ஒரு மணி நேரத்துக்கு மேல் தனது கட்சி குறித்து பேசினார். இன்றைய அரசியல் சூழல்கள் குறித்தும் விளக்கமாக சுட்டிக் காட்டினார்.

அப்போது நடிகர் விஜய், நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பது குறித்து பேசியதாவது, நானும் சினிமாவில் நடிச்சோமா, நாலு காசு பார்த்ததோமான்னு அப்படியே இருந்திருக்கலாம். ஆனா நாம மட்டும் நல்லா இருக்கறதுன்னு நினைக்கறது சுயநலம் இல்லையா, அப்படீன்னு தோணியது.

நம்மை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவில்லை என்றால், அது விஸ்வாசமாக இருக்குமா, ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து வெச்சு என்ன பண்ண போறோம். இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்னதான் பதிலுக்கு செய்யப் போறோம். இப்படிப்பட்ட ஏகப்பட்ட கேள்விகள் எனக்குள் வந்துக்கொண்டே இருந்தது.

அப்படி எனக்குள் வந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக விடையாக வந்த பதில்தான் அரசியல். அரசியல் நமக்கு செட் ஆகுமா என்று நினைத்தவுடன் பலவிதமான பூதங்கள் கிளம்பியது. இனி பின்விளைவுகளை பற்றி எல்லாம் யோசிக்காமல் இறங்கி அடித்தால்தான் நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று தோன்றியது. இப்போது இறங்கியாச்சு. இனி எதைப்பற்றியும் யோசிக்க கூடாது என்று பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1990களிலேயே தமிழக அரசியலுக்கு வருவார் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் கடைசி வரை அவர் அரசியலுக்குள் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு, பின்பு அப்படியே பின்வாங்கி விட்டார். அரசியலுக்கு வர என் உடல் நலம் ஒத்துக்கொள்ளவில்லை எனறு கூறியவர், இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறார்.

என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கு என்று இப்போதும் பேசிக்கொண்டிருக்கும் ரஜினி, மக்களுக்கு எதுவுமே செய்யாத நிலையில் விஜய் அந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது பதிலுக்கு செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று அவர் அரசியல் மாநாட்டில் பேசியிருப்பது, ரஜினிகாந்துக்கு வைத்த சூடாகவும், அதற்கு மேலாக ஒரு லெவலுக்கு மேல் சம்பாதிச்சு என்ன செய்யப் போகிறோம் என்றும் கேள்வி எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.