எட்டு தோட்டாக்கள் ஜீவி படப்புகழ் வெற்றி நடிக்கும் படம்.
காசியில் 10 வருடங்கள் தவ வாழ்க்கை புரியும் ஜீவி, தனது தவ வாழ்க்கையில் மிகப் பெரிய இடையூறாக அவர் நினைப்பது அவர் எழுத்தைத் தான், அவரின் எழுத்து அவரை எங்கோ கொண்டு சென்று கொண்டே இருக்கிறது இதனால் அவர் தனது துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு திரும்பவும் எழுத்தாளர் ஆவதற்காக சென்னையை நோக்கி பயணப்படுகிறார் ..
பயணம் செய்யும் வழியில் ஒரு ஜெர்மனியைச் சார்ந்த பெண்ணை பார்க்கிறார். அவர்களின் சந்திப்பு இனிமையாகிறது. அதுவே நாளடைவில் சென்னையில் ஒரு காதலாக பூத்துக் குலுங்குகிறது. ஆனால் இடையில் அந்தப் பெண் பாண்டிச்சேரியில் சில நபர்களால் கொல்லப்படுகிறாள்.
இதனால் மீண்டும் அவர் துறவற வாழ்க்கைக்கு சென்று விடுகிறார். அவர் ரிஷிகேஷ் இல் இருக்கும் போது அவர் மனது அவரின் காதலியை நினைத்து கொண்டே இருப்பதால் , அதை நினைத்து ஆலன் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி, அவருடைய காதலியின் பெயரில் வெளியிடுகிறார்.
அந்த புத்தகம் பல்வேறு அங்கீகாரங்களை பெறப்படும் வகையில் அதன் ஆசிரியர் யார் என்று தேடி வினவுகிறார்கள். இந்நிலையில் அவர் அந்தப் புத்தகத்தை தேடி திரும்பவும் சென்னைக்கு வருகிறார், அங்கு அவர் ஒரு லைப்ரரியின் பெண்ணை சந்திக்கிறார். அதன் மூலம் அவர் யார்..? அந்த பெண்ணுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பதை சொல்வது தான் ஆலன் படத்தின் முழு கதை.
துணுக்காக நாம் ஒரு கவிதையை படிக்கும் போது நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கடந்து செல்வது உண்டு. அந்த சாயலில் ஒரு படத்தை எடுப்தாக நினைத்து திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவா.
படத்தில் வெற்றி, அந்நிய பெண், அனு சித்தாரா ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக உள்ளது.
வன்மங்களும், வன்முறைகளும் மட்டுமே நிறைந்த சமீபத்திய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கியில், மனதை வருடுவது போல் சில படங்கள் வருவது உண்டு. அது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட ஒரு படம் தான் இது. ஆனாலும் இது ஜொலிக்காது.
காரணம் என்னவென்றால் கதாநாயகனுக்கு ஒரு தெளிவற்ற கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்கள். அவன் ஒரு புத்தகத்தை எழுதுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த புத்தகம் எதை சார்ந்து சொல்கிறது என்ற விஷயத்தை விளக்க தவறி விட்டார்கள். அவன் ஏன் துறவற வாழ்க்கையை மேற்கொண்டான் என்பதற்கு எந்த ஒரு காரணமும் கூறாமல் போனது அதைவிட மிகப்பெரிய தவறு.
இயக்குனர் தான் கண்ட சம்பவங்களை வைத்து ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாரே தவிர அதை சினிமாவுக்கு ஏற்ற திரைமொழியாக எப்படி எடுப்பது என்று தெரியாமல் போனது இந்த படத்தின் மிகப்பெரிய பிழை.
ஆக மொத்தத்தில் ஆலன், ஆள முடியாமல் போய்விட்டான்.