சார் திரைவிமர்சனம்

‘பருத்திவீரன்’ சரவணன், விமல், சாயா கண்ணன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம் சார்.

ஆரம்பத்தில் இதற்கு மா போ சி என்று தான் பெயர் வைத்தார்கள். ஆனால் சில பல காரணங்களால் தற்போது சார் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

கன்னி மாடம் படத்தை இயக்கிய இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட் தான் இந்த படத்தின் இயக்குனரும் கூட.

மூன்று தலைமுறைகளாக பள்ளிக்கூடத்தை கட்டி காக்கும் ஒரு குடும்பத்தினர், அதே மூன்று தலைமுறைகளாக அந்தப் பள்ளிக்கூடத்தை இடித்து மக்களை அடிமையாக்க நினைக்கும் இன்னொரு குடும்பத்தினர். இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்பதே கதை!

இந்த ஒரு கருவே போதும் படத்தை மிகவும் விறுவிறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் எடுப்பதற்கு!. ஆனால் இயக்குனர் அந்த இடத்தில் தான் கோட்டை விட்டுவிட்டார். முதல் பாதி படம் சீரியஸாக செல்லாமல் மிகவும் சோம்பலை முறித்தபடியே செல்கிறது. இது மிகவும் அபத்தமான ஒரு விஷயம்.

சரி இரண்டாம் பாதியிலாவது கதை நகருமா என்று பார்த்தால் கதை எங்கெங்கோ நகர்கிறது.. எதை எதையோ சொல்கிறது.. எதைச் சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்வதற்குள் படம் முடிந்து விடுகிறது.

அதுமட்டுமில்லாமல் 1980, 1960, 1950 என்ற காலகட்டங்களில் காட்டும் விஷயங்கள் எதுவும் நம்பகத்தன்மையை கொடுக்கவே இல்லை.

நிறைய இடங்களில் continuity மிஸ் ஆவது படத்திற்கு பேர் அதிர்ச்சி.

அன்றைய காலகட்டங்களில் அரசு பள்ளிக்கூடத்தில் அரசு தொடக்கப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி என்று இருப்பது மிகவும் குறைவு, பெரும்பாலும் அரசு சீர்மரபினர் பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி,அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, அரசு முதலியார் நடுநிலைப்பள்ளி என்ற பெயரில்தான் இருக்கும். இவை அனைத்தும் அங்குள்ள மக்களுக்கு கல்வி அறிவு அதிகம் புகுத்தப்பட வேண்டும் என்று நல வாரியத்தில் அடிப்படையில் அரசு எடுத்த முன்னெடுப்புகள் ஆகும்.

சரி.. அதையாவது விட்டு விடுவோம். ஒரு பள்ளிக்கூடத்தில் அனைத்து சாதிக்காரனும் படிப்பான், அவனும் இந்த படத்தை பார்ப்பான் என்று யோசிக்க வேண்டாமா? எவ்வளவு பெரிய அபத்தமான ஒரு செயல். அதுமட்டுமில்லாமல் முதல் தலைமுறையிலேயே அவருடைய தாத்தா அடித்தட்டு மக்களுக்கு பகுத்தறிவை புகுத்தி விட்டார் என்று கூறிய பட்சத்தில், அதிலிருந்து ஒரு பகுத்தறிவு மாணவன் கூட வெளியே வந்திருக்க மாட்டானா என்ன? இவை அனைத்தும் மக்களுக்கு சாதியப் பின்னையில் ஒரு படம் எடுத்தால் காசு பார்க்கலாம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு படம் என்று பார்க்கத் தோன்றுகிறது.

நடிகர் விமல் விலங்கு வெப் சீரிஸ்க்கு பிறகு ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார், அவருடைய முந்தைய படமான போகுமிடம் வெகு தூரம் இல்லை ஒரு நல்ல தரமான படம், ஆனால் அந்தப் படம் திரையரங்குகளில் ரொம்ப தூரம் போகவில்லை. ஆனால் இந்தப் படத்தில் அவரை குறை சொல்லி என்ன பிரயோஜனம் அவருக்கு கொடுத்த நடிப்பை அவர் ஒழுங்காக நடித்தார் இயக்குனர் எடுக்கும் விதத்தில் தானே படம் அமையும்.

படத்தின் இசை ஒரு மிகப்பெரிய தொய்வு, காட்சிகள் மிகப்பெரிய தொய்வு. ஆக மொத்தத்தில் படம் தொய்வோ தொய்வு. இதற்கு சத்யராஜ் கவுண்டமணி சுகன்யா நடித்த திருமதி பழனிச்சாமி படத்தை நன்கு ரசித்து சிரித்து கண்டு களிக்கலாம்.

படத்தில் ஒரே ஆறுதல் நடிகை ரமாவின் நடிப்பு.

ஆக மொத்தத்தில் சார் படம் எப்படி இருக்கிறது என்றால், ” சார்.. கொஞ்சம் அங்குட்டு போங்க சார் “.