நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
இந்த படத்தின் ஷூட்டிங் அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது.
இந்நிலையில் சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பை இன்றைய தினம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கங்குவா, சூர்யா 44 படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவாரா அல்லது சுதா கொங்கராவுடன் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் வித்தியாசமான காம்பினேஷனில் சூர்யா, சூர்யா 45 படத்திற்காக இணைந்துள்ளார்.
இது குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ள நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அரிவாள், கத்தி போன்றவற்றில் பட்டையிடப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. மேலும் குதிரை போன்ற ஒரு உருவமும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது.
இதனால் ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்த கதைக்களமாக இந்த படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டுக்குள் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.