சில இயக்குனர்களுக்கு மட்டுமே அவர்கள் இயக்கும் முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து விடுகிறது. பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், அமீர் இயக்கிய மௌனம் பேசியதே, மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா, அட்லி இயக்கிய ராஜா ராணி என பல படங்களை, அதன் இயக்குனர்களை சொல்லலாம்.
அந்த வகையில் சமீபத்தில் முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை, கவனத்தை பெற்றவர் தமிழரசன் பச்சமுத்து. கெத்து தினேஷ், ஹரீஷ் கல்யாண் இரட்டை நாயகர்களாக நடித்த லப்பர் பந்து படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. லட்சுமன்குமார் தயாரிப்பில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை ரூ. 35 கோடிக்கு மேல் வசூலை கடந்துள்ளது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சாதியமும் பேசியிருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. ஆனால் இலைமறை காயாக அதை அழகாக சொல்லி இருக்கிறார். வழக்கமாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போல இல்லாமல், வேறு விதமாக அவர் கிரிக்கெட் மூலம் அதை சொல்லியிருப்பதுதான் புதுமை.
மேலும் மாமனார், மருமகன் இருவருமே கிரிக்கெட் வீரர்களாக இருப்பதும், கிரிக்கெட்டை விரும்பாத மாமியார், கிரிக்கெட் விளையாடும் அப்பா போல இருப்பதால் காதலிக்கும் மகள், நண்பராக பால சரவணன், கிரிக்கெட் கேப்டனாக காளி வெங்கட் என படம் வேற லெவலில் கதைக்களத்தை கொண்டிருக்கிறது.
இந்த படம் தொடர்ந்து பெரிய கவனிப்பை, வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவை ஏற்கனவே டான் தயாரிப்பு நிறுவனம் ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்துவிட்டது. ஆனால் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 3 கோடி வரை சம்பளம் தருவதாக கூறி, தமிழரசன் பச்சமுத்துவை அடுத்த படத்தை இயக்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனால் ஏற்கனவே ரூ. 1 கோடி சம்பளம் பேசிய டான் தயாரிப்பு நிறுவனம் சுதாரித்துக்கொண்டு, இப்போது ரூ. 3 கோடி சம்பளம் தருவதாக ஒப்பந்தத்தை மாற்றி எழுதிக்கொண்டுள்ளது. இப்படி லப்பர் பந்து படம் தந்த அபார வெற்றி மூலம் 2வது படத்திலேயே ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார் தமிழரசன் பச்சமுத்து. ஆனால் இவர் லப்பர் பந்து படத்துக்கு பெற்ற சம்பளம் ரூ. 10 லட்சம் என்றும் ஒரு தகவல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.