ஆன்லைன் கல்வி மோசடியை கையில் எடுத்திருக்கும் ஞானவேல் : வச்ச குறி தப்பல!

என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை சுற்றிய படமாக வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் உருவாக்கியுள்ளார்.

ரஜினிகாந்த் படமாகவும் அதே நேரத்தில் கருத்து சொல்லும் கதையம்சம் கொண்ட படமாகவும் வேட்டையன் படத்தை கொடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த கோட் படத்தை போல வெறும் கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகவில்லை என்பதே பெரிய ஆறுதல் தான். ஆரம்பத்தில் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை என்றும் தொடர்ந்து படம் தீபாவளி வரை குடும்ப ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட பாசிட்டிவான சமூக அக்கறை கருத்துக்களை ஞானவேல் முடிந்தவரை அடுக்கியிருந்தாலும் ஒரு சில இடங்களில் அவர் கொஞ்சம் கோட்டை விட்டது ஜெய்பீம் அளவுக்கு வொர்த்தான படமாக இதை பார்க்க முடியவில்லை என்கிற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறது.

ரஜினிகாந்த் படத்தையும் தாண்டி இது ஞானவேல் படமாகவே ரசிகர்களை கவர்கிறது. சும்மா ஆட்டம் பாட்டம் ஃபைட் என ஹீரோ வெறும் மசாலா மாஸை காட்டாமல் மாஸ் காட்ட வேண்டும் என்றாலும் அதற்கு சரியான காரணம் மற்றும் கதை இருக்க வேண்டும். அந்த வகையில் ரஜினிகாந்த் படத்தை தாண்டி ஞானவேல் என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை கையில் எடுத்து போலீஸ் அதிகாரிகள் யாருக்காக போலி என்கவுன்ட்டர்களை செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள விதம் பாராட்டுக்குரியது.

ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் இந்தியா என சொல்லி விட்டு குழந்தைகளை கஷ்டப்படுத்தும் விதம், அவர்களை மன அழுத்தம் அடையச்செய்வது, நீட் தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள், ஆன்லைன் ஃபிராடுகள் அதிகரிப்பது, அதனால் பாதிக்கப்படுவது 70 சதவீத ஏழை இந்திய மக்கள் தான் என்றும் “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்கிற வசனத்தை ராணா டகுபதியை வைத்து சொல்ல வைத்த இடமெல்லாம் பேராசை பிடித்த மனிதர்கள் நம் சமூகத்தை எப்படி ஆட்டிப் படைக்கின்றனர். இல்லாத பட்டவர்களின் வயிற்றில் எப்படி அடிக்கின்றனர் என்பதை காட்டியிருக்கிறார் ஞானவேல்.