நடிகர் கார்த்தியின் 27வது படம், மெய்யழகன் படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த்சாமி இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா -ஜோதிகா தம்பதியின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மெய்யழகன் படத்தில் மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நான் போகிறேன் மற்றும் யாரோ இவன் யாரோ என தொடங்கும் இரண்டு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சொந்த ஊர் மற்றும் தன் நெருங்கிய உறவுகளை விட்டுச் சென்ற ஒருவர், சில காலம் பிரிந்து வாழ்ந்துவிட்டு திரும்பவும் தன் உறவுகளுடன் சேர்ந்து வாழும் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டரில் கார்த்தி இந்த படத்தில் அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் 4வதாக வெளிவந்த படம் வாழை. இந்த படம் சமீபத்தில் வெளியாக பெரிய அளவில் வரவேற்பை, பாராட்டைப் பெற்றது. இந்த படம் ரூ. 33 கோடி வரை வசூல் மழை பொழிந்தது.
இந்நிலையில் வாழை பட இயக்குனர் மாரி செல்வராஜ், மெய்யழகன் படத்தை பாராட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மெய்யழகன் படம் பார்த்தேன். மனித வாழ்வின் ஏக்கமே பெரும் பிரியத்தில் உருகி வழிவதுதான் என்பதை எந்த சமரசமும் இல்லாமல் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். இதனை சாத்தியப்படுத்திய கார்த்தி, அரவிந்த் சாமி, இயக்குனர் பிரேம்குமார் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள் என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.