ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள படம் அமரன். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், முகுந்தன் என்ற கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முகுந்த் வரதராஜனின் மனைவியாக இந்து ரெபக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர கிளிம்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீகுமார், சுரேஷ் சக்கர வர்த்தி, ராகுல் போஸ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் அமரன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் வராத நிலையில், அவர் போல பேசும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து கமல் போல பேசிய சிவகார்த்திகேயன், நான் வரமுடியவில்லை என்றாலும் என் படத்தின் குழு இருக்கிறார்கள். எனக்கு தந்த ஆதரவை அவர்களுக்கு தரவேண்டும் என்று கமல்ஹாசன் போல பேசினார். இதைக்கேட்ட அனைவரும் விசில் அடித்து, கைத்தட்டி ரசித்தனர். இந்த வீடியோ தற்போது எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
சரியான தேர்வு: முன்னதாக அமரன் படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி, முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. சிவகார்த்திகேயன், ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திரமாக அவர் ஜொலித்தாலும், கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும் என்று பேசி இருந்தார்.