மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அதன்பின் அவருடைய தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இயக்குனரானக அறிமுகமானவர் எஸ்.ஏ.தனா. தற்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கியுள்ள படம் ஹிட்லர். கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா சுமன் , சரண் ராஜ் , விவேக் பிரசன்னா , ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் ஆகிய இரு படங்களும் வெற்றிபெறாத நிலையில் ஹிட்லர் திரைப்படம் அவருக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தை பார்த்தோம்.
தேனி மாவட்ட மலைகிராமம் ஒன்றில் ஆற்றை கடக்க முயலும் கூலித் தொழிழாளி பெண்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறக்கும் காட்சியில் தொடங்குகிறது ஹிட்லர் படம். கதை அப்படியே நகர்ந்து சென்னைக்கு வருகிறது. தேர்தல் நெருங்கி வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது தமிழ் திராவிட சமூதாயக் கட்சி. இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார். எப்படியாவது மக்களுக்கு பணத்தைக் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் தொகுதிக்கு பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ திருடிவிட்டு செல்கிறார்கள். இத்துடன் அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்துவிடுகிறார்கள். இந்த கொலையை விசாரிக்கிறார் டிஜிபி கெளதம் வாசுதேவ் மேனன்.
இன்னொரு பக்கம் சென்னைக்கு புதிதாக வேலை தேடி வந்து. லோக்கல் ரயிலில் ஒரு பெண்ணைப் பார்த்து அவர் மேல் காதலில் விழுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. இரண்டு கதைகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்க ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் செய்து பணத்தை திருடுவது விஜய் ஆண்டனி தான் என கண்டுபிடிக்கிறார் கெளதம் மேனன். அவர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார். திருடிய பணத்தை என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தனா.
இயக்குநர் தனாவின் முதல் படமான வானம் கொட்டட்டும் குடும்ப சூழலை மையப்படுத்திய ஒரு கதை . தந்தையை பிரிந்து வாழும் அண்ணன் தங்கை தனியாக ஒரு சமுதாயத்தில் வளர்ந்து வருவது. பல வருடங்களாக தொடர்பில் இல்லாத தந்தையை திடீரென்று எதிர்கொள்ள நேர்கையில் அவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள் என உணர்வுப்பூர்வமான ஒரு கதையை பேச முயற்சித்தார். ஆனால் ஹிட்லர் படத்தைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் காலம் காலமாக தேய்ந்து போன ஒரு ஜானரை அவர் கையிலெடுத்திருக்கிறார்.
பிரச்சனை என்னவென்றால் இந்த ஜானரில் இனிமேலும் புதிதாக சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம் தான். படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே இதுதான் க்ளைமேக்ஸ் என்று சொல்லிவிட முடிகிறது. ஒவ்வொரு கொலை நடக்கும்போதும் அதை விஜய் ஆண்டனிதான் செய்கிறார் என்பதை நாம் யூகித்துவிடாமல் இருக்க காதல் காட்சிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு ஒன்றும் பலனளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கம் போல் விஜய் ஆண்டனியின் சராசரிக்கும் குறைவான நடிப்பு கதைக்கு எந்த வகையிலும் சாதகமாக அமைவதில்லை. போலீஸாக வரும் கெளதம் மேனனை வைத்தே கூட முழு படத்தை இயக்கியிருந்தால் பார்வையாளர்கள் ஏதும் குறை சொல்லியிருக்கப் போவதில்லை.
ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவைக் காட்சிகள்பெரிதாக ஈர்க்கவில்லை. விவேக் மெர்வினின் பின்னணி இசை எங்கேஜ் செய்தாலும் பாடல்கள் பெரிதாக கவர்வதில்லை. விவேக் பிரசன்னா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல் சில காட்சிகளில் வந்து போகிறார். விஜய் ஆண்டனியின் மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாகவே இடம்பெற்றுள்ளன. இருந்து என்ன பயண் கதை ரொம்ப பழசா இருக்கே… விஜய் ஆண்டனி தலையில் போட்டிருக்கும் விக், பொருத்தமாக இல்லை. சாக்லேட் லுக்கில் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்குனர் அவரின் உருவத்தை மிகவும் சேதப்படுத்தி விட்டார்.
இயக்குநர் தனா, இயக்குனர் மணிரத்தினிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, படத்தின் பெரும்பாலான காட்சிகள் மற்றும் வசனங்கள் மணிரத்தினம் படத்தை தழுவியே எடுப்பது போல் எடுத்திருக்கிறார். ஆனால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை.
இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி தெருவில் இறங்காத குறையை பிரமோஷன் செய்திருந்தார். ஒருவேளை இந்த படம் அந்த அளவுக்கு நன்றாக இருக்குமோ என்ற எங்கள் சந்தேகத்தை பொய்யாக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
விஜய் ஆண்டனி படம் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மக்களால் கொண்டாடப்படக்கூடிய படம். அதை விடுத்து இது மாதிரியான சினிமாக்களில் நடித்து அவருடைய மதிப்பை குறைத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நன்று.
மொத்தத்தில் ஹிட்லர் படம் ஜாடிக்கேத்த மூடி இல்லை.