காமெடி நடிகர் சதீஷ், பாவல் நவகீதன், அஜய் ராஜு, மைம் கோபி, பவா செல்லத்துரை என பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம்.
ஏற்காடு மலைப் பகுதியில் ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. வாடகைக் கார் ஓட்டுநரான சதீஷ், தனது காரில் எதிர்பாராமல் வந்து மோதி நிகழ்விடத்திலேயே இறந்துபோகும் ஒருவரின் சடலத்தை மறைக்க, அதைத் தனது காரின் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார். அதே இரவில் ஒரு பெண் கொலையான தகவல் ஏற்காடு காவல் நிலையத்துக்கு வருகிறது.
இந்தச் சிக்கலான சூழ்நிலையில் அந்தக் காவல் நிலையத்தில், சக காவல் அதிகாரியான அஜய் ராஜுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் பாவெல்லிடம் வேறொரு விதி மீறலுக்காக மாட்டுகிறார் சதீஷ். பெண் கொலையான வழக்கை விசாரிக்கிறார் அஜய் ராஜ். இந்த இருவருக்கிடையில் மாட்டும் சதீஷ் யார்? காவல் நிலையத்திலிருந்து அவரால் வெளியே வர முடிந்ததா? கொலையான பெண் யார்? அவரது கொலையின் பின்னணி என்ன என்பதை நோக்கி விறுவிறுவென நகர்கிறது படம்
உடனடியாகக் கதையைத் தொடங்கியதும் சதீஷின் காய் நகர்த்தல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. சதீஷைப் பகடையாக வைத்து பாவெல்லும் அஜய் ராஜும் ஆடும் ஆட்டம், ஒரு குற்ற த்ரில்லர் திரைக்கதை உருவாக்கும் அழுத்தத்தைச் சீராக்கும் அதிகார மைய நகைச்சுவையாக எடுபடுகிறது. இந்த இருவரது நடிப்பும் குற்ற நாடகத்தின் திரை அனுபவத்தை மேம் படுத்தியிருக்கின்றன. சதீஷ் தனது கதாபாத்தி ரத்தின் திரிசங்கு நிலையை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் எப்படி வாங்குகின்றனர் என்ற உண்மையை உரக்க கூறி இருக்கின்றனர்.
சதீஷ் இந்த படத்தில் அதிகம் பேசவில்லை அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக அமைந்துள்ளது. பொதுவாகவே காமெடி என்கிற பெயரில், கடி ஜோக்குகளை தூக்கி வீசுவார், இதில் அது இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது சிறப்பு அம்சம்.
ஒரு மனிதன் தெரியாத்தனமாக காவல் நிலையத்தில் சிக்கிக் கொண்டால், அவனிடம் எப்படி எல்லாம் பணத்தை கரக்கின்றனர் என்பதையும் மிக இயல்பாகவே காட்டியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அதிகாரத்திற்காக, இரண்டு காவல் அதிகாரிகள் தங்களுடைய ஈகோவினால் ஒரு கைதியை பந்தாடும் விதம் எப்படி இருக்கும் என்றும் காட்டியுள்ளனர்.
கதை நிகழும் ஏற்காட்டின் பனி படர்ந்த இரவை, மிக இணக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா. படத்தின் ஒலி வடி வமைப்பில் கதைக் களத்தை உணரவைத்திருக்கிறார்கள் அருண் ஏ.கே. ராஜா நல்லையா இருவரும். எம்.எஸ்.ஜோன்ஸ் இசையிலும் பழுதில்லை. ஆனால் திரைக்கதை மெதுவாக நகரும்போது இசையை மிக வேகமாக கொடுத்திருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை!
இந்தப் படத்தின் இயக்குனர் சாச்சி, ஏற்கனவே சிக்ஸர் என்கிற ஒரு டீசன்டான படத்தை கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்தப் படமும் ஒரு டீசன்ட்டான படமாகவே இருக்கிறது.
கதையும் நமக்குத் தெரிந்த கதை தான் என்றாலும், சமீபத்தில் நாம் பார்த்த பழைய மகாராஜா படத்தின் கதையை போன்ற சாயல் இருந்தாலும், கதாநாயகி தேவைப்படாமலேயே ஒரு த்ரில்லர் குற்றக்கதையை விறுவிறுப்பாக நகர்த்திக் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.