ரஞ்சித் மாரி செல்வராஜ் உடன் என்னை ஒப்பிட்டு பேசுவதா?

லப்பர் பந்து திரைப்பட இயக்குனர்

கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘லப்பர் பந்து’ திரைப்படம். தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகான ‘மாண்டேஜ்’தான் படம். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

கிராமத்து கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் சாதிய பாகுபாட்டை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் யார்க்கர் ரகம். ‘தம்பி மாதிரி’ என்று நினைப்பதுதான் பிரச்சினை என்று இடம்பெற்றுள்ள வசனமும் சிந்திக்க வைக்கிறது. இரு கிரிக்கெட்டர்களுக்கு இடையேயான ஈகோதான் கதை என்றாலும் ஆண்களால் பெண் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கதை பேசியிருப்பது பவுன்சர் ரகம்.

ஆண்களோடு சேர்ந்து ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்தும் வகையில், ‘அது சாதி திமிர்னா, இது ஆம்பள திமிரு’ என்று இடம்பெற்றுள்ள வசனம் சுளீர். கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் இயக்குநர். எளிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் கிரிக்கெட் பின்னணியில் நேர்த்தியாகச் சொல்லியதில் ‘லப்பர் பந்து’ பறக்கிறது.

இவ்வாறாக பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், சாதிய பிரச்சினைகளை மையமாக வைத்து பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் முதலானவர்கள் அழுத்தமாகவும், வீரியத்துடனும் படைப்புகளைக் கொடுத்து வரும் சூழலில், அதே பிரச்சினைகளை ஜாலியான கதைக் களத்தில் போகிற போக்கில் சொல்லும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் பாணி குறித்து ஒப்பிட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான கேள்வியை வீடியோ பேட்டி ஒன்றில் எதிர்கொண்ட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘ஒரு ஊருக்குள் என்னென்ன இருக்குமோ அதெல்லாம் லப்பர் பந்து கதையில் சொல்லி உள்ளேன். இயக்குநர்கள் ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதி ரீதியான வேறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது கதையில் அதன் வலி கலந்த ஆக்ரோஷம் இருக்கும். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்ற கருத்து அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அவர்களது படைப்புக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அதை கேட்க வேண்டும்.

அதுவே சாதி ரீதியான வேறுபாட்டை நான் வேடிக்கை பார்த்தவன். என் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் நான் பார்த்தவை. எனது அனுபவத்தில் இருந்து பெற்றவை. அதனால், நான் இந்தக் கதையில் அது குறித்து ஆழமாக சொல்லவில்லை. அதோடு அந்த விவரமும் எனக்கு அதிகம் தெரியாது. அதே நேரத்தில் கதைக்கும் அது அதிகம் தேவைப்படவில்லை. பத்து வருஷத்துக்கு முன்பு நான் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தை இப்போது மாற்றிக் கொண்டுள்ளேன். என்னிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கு பிறகே இதை சொல்லி உள்ளேன். தவறுகளை திருத்திக் கொண்டு முதலில் நாம் சரியாக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும்’ என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விவரித்துள்ளார்