எம்ஜிஆர் காலத்தில் சந்திரபாபு, நாகேஷ், டணால் தங்கவேலு போன்றவர்களின் காமெடியை மக்கள் வெகுவாக ரசித்தனர். அதன்பிறகு கவுண்டமணி – செந்தில் காமெடி காலம் ஆரம்பமானது. அவர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காமெடி ராஜ்ஜியம் நடந்தது. 1990 முதல் 2010ம் ஆண்டு வரை வடிவேலு காமெடியில் இம்சை அரசனாக வடிவேலு வெற்றிக் கொடி நாட்டினார். ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க கூட கால்ஷீட் ஒதுக்க முடியாத அளவுக்கு அவர் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார்.
அதன்பிறகு கேப்டன் விஜயகாந்துடன் வடிவேலுவுக்கு ஏற்பட்ட மோதல், திமுக மேடைகளில் விஜயகாந்துக்கு எதிரான பிரசாரம், சந்தானம் வருகை என, வடிவேலுவின் சினிமா வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பித்தது. இயக்குனர் ஷங்கருடனும் பிரச்னை செய்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வடிவேலு சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே சந்தானம் காமெடியில் ஜொலித்தார். பிறகு சூரியும் காமெடியில் அசத்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருமே ஹீரோ நடிகர்களாக மாறி நடிக்க ஆரம்பித்து விட்டனர். சூரி நடித்த விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அவர் இனி ஹீரோவாக மட்டுமே பயணிப்பேன் என்று கூறிவிட்டார். சந்தானமும் ஹீரோ என்ற இமேஜை விட்டு இறங்கி வரத் தயாராக இல்லை.
அதனால் இப்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடுமையான பஞ்சம் நிலவுகிறது. பல படங்களில் காமெடி ரோலில் நடிக்க ஆளின்றி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தடுமாறுகின்றனர். அதனால் வேறு வழியின்றி நடிகர் யோகி பாபுவை தங்களது படங்களில் கமிட் செய்கின்றனர். அவரது காமெடி காட்சி யாரும் பார்த்தவுடன் சிரிக்கும் அளவுக்கு இதுவரை இருந்தது இல்லை என்பதும் மறுக்க முடியாதது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, இப்போது வரும் படங்களில் காமெடியே இல்லை. எது காமெடி, எதுக்கு சிரிக்கிறாங்கன்னே தெரியலை. கடுப்புதான் ஆகுது. யோகிபாபு ஏதாவது பஞ்ச் அடிப்பார். ஆனால் அதெல்லாம் காமெடி இல்லை என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா. சக நடிகரான ரமேஷ் கண்ணா, யோகிபாபுவின் காமெடி நடிப்பை விமர்சித்திருப்பது இப்போது வைரலாகி வருகிறது.