மலையாள திரைத்துறையில் பற்றி எரியும் ஹேமா கமிட்டி அறிக்கை : மேலும் ஒரு மூத்த நடிகை புகார்.

மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர்.

அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 ஆம் ஆண்டு மோகன்லாலுடன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, ஒரு மூத்த நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை வெளிப்படுத்தினார். கேரளாவில் உள்ள கண்ணூரில் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை உஷா லிஃப்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து வெளிப்படையாக பேசினார்.

அவர் இது தொடர்பாக பேசுகையில், ” என்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் இப்போது உயிருடன் இல்லை, எனவே அவரது பெயரை வெளியிட மாட்டேன். அவரது தவறான நடவடிக்கைக்கு எதிர்மாறாக நடந்து கொண்டதால், தனது நடிப்பு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் கூறினார்.

பஹரைன் வளைகுடாவில் ஒரு சினி நிகழ்ச்சி நடந்து. அந்த நிகழ்ச்சி முடிந்து விமான நிலையம் செல்ல காத்திருந்தோம், அனைவரும் களைப்பாக இருந்தனர். நாங்கள் கொண்டு வந்த லக்கேஜ்களை ஹாலுக்கு கொண்டு வருமாறு மோகன்லால் கூறினார். அங்கே அமர்ந்து பேசலாம் என்றார்.

அங்கு என்னுடன் வந்திருந்த மோனிஷா, ரேவதி, சுகுமாரி, மற்றும் நான் என் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு லிப்டில் ஏறினோம். அப்பொழுது அந்த மூத்த நடிகர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார், பதிலுக்கு நான் அவரை அடித்துவிட்டேன்.

லிஃப்ட் அடுத்த தளத்தில் நின்றதும், நடிகை சுகுமாரியும் லிப்டில் ஏறி என்ன பிரச்சனை என்று கேட்டார். நடந்ததை சொன்னேன், எல்லோருக்கும் தகவல் சொல்கிறேன் என்று அவர் சொன்னார். முதலில் மோகன்லாலிடம் நடந்த சம்பவத்தை நடிகை சுகுமாரி விவரித்தார்.

பின்னர், லாலேட்டனும் (மோகன்லால்) சுகுமாரியும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். “மலையாளத் திரையுலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நடிகரிடமிருந்து இதுபோன்ற நடத்தையை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார் உஷா.