ஹேமா கமிட்டி போல் தமிழ்நாட்டிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் : நடிகர் விஷால்.

நடிகர் விஷால், தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு பரிமாறிய பின் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மலையாளத் திரையுலகில் பாலியல் முறைகேடுகள் பற்றி ஹேமா கமிட்டி வெளிப்படுத்திய பிறகு, தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் 10 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும், நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவில் இது போன்ற குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

விஷால் மீது ஸ்ரீரெட்டி அளித்த பாலியல் புகார் குறித்து கேட்டதற்கு, “ஸ்ரீரெட்டி யார் என்று எனக்குத் தெரியாது, அவர்களின் செஞ்ச ஜோக்குகள் மட்டுமே எனக்குத் தெரியும்” என்று சிரித்தபடி பதிலளித்தார். இதனால், விஷால் தனது பெயர் தொடர்பான எந்த புகாரையும் அலட்சியமாக எடுத்துக்கொண்டதையே காட்டுகிறது.

மேலும் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்வது குறித்த கேள்விக்கு, ஏன் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால், பல தொழிலாளர்கள் இங்கு வேலை இழப்பார்கள். நீங்கள் வேலை நிறுத்தம் செய்வதால் என்ன முன்னேற்றம் வரப்போகிறது என்று விஷால் ஆவேசமாக பேசினார். தயாரிப்பாளர் சங்கம் நடத்தவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.