ஹேமா கமிட்டி அறிக்கை : தங்கலான் பட நடிகை பார்வதி திருவோத்து எதிர்ப்பு.

வெளியில் இருந்து பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாக தெரியும் சினிமா உலகத்திற்குள், கருமை நிறைந்த பக்கங்கள் பல உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு விஷயம் தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக இருந்த புகார்களை அடுத்து ஹேமா கமிஷன் தற்பொழுது 233 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மலையாள திரை உலகை பொறுத்தவரை, அங்குள்ள “காஸ்டிங் கவுச்” மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருப்பதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.

திரைப்பட வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம், அந்த வாய்ப்புக்கு இணையான பாலியல் ரீதியான சேவைகளுக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பெண்களை கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஹேமா கமிஷன்.

இந்த விஷயத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் இப்பொது பதவி விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மற்றும் மலையாள மொழி நடிகர் ரியாஸ் கான் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரை உலகிற்கு எதிராக வெளியான இந்த ஹேமா அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த திரையுலகில் இருக்கும் பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரம், ஒரு சிலர் மட்டுமே செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த திரையுலகையும் குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

அதன்படி தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பார்வதி திருவோத்து, தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “ஹேமா கமிஷன் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையை வைத்து, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் என்று பேசுவது மிகவும் தவறு. அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஹேமா கமிஷன் அறிக்கையை நன்கு ஆராய்ந்து, இனி சினிமா துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை பற்றி தான் அனைவரும் பேச வேண்டும், இது அதற்கான நேரம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல நடிகர் டோவினோ தாமஸ், ஹேமா அறிக்கை குறித்து பேசும்பொழுது “ஒட்டுமொத்த கேரள திரையுலகினரை அவமானப்படுத்துவது போல பேசுவது மிகவும் தவறு, இது மலையாள திரை உலகில் மட்டுமல்ல, உலக அளவில் சினிமா துறையில் இது அவ்வப்போது நடந்து வரும் விஷயம் தான்” என்று அவர் தனது கருத்தை கூறியிருக்கிறார்.