கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.
மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உண்மைகளை இந்த அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர்களின் மீதான அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டு வருகின்றன.
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான மூத்த நடிகர் சித்திக் , இயக்குநர் ரஞ்சித் , நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்டவர்கள் மீது நடிகை ரேவதி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை மினு முனீர் நான்கு மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2013 ஆம் ஆண்டு தான் ஒரு படத்தில் நடித்து வந்தபோது நடிகர் முகேஷ் , மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு , ஜெயசூர்யா ஆகியவர்கள் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மினு முனீர் தெரிவித்துள்ளார். தான் கழிவறைக்கு சென்று வந்தபோது ஜெயசூர்யா தன்னை பின்னிருந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும் தான் பயந்து அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் அட்ஜஸ்ட் செய்தால் தனக்கு மேலும் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக முகேஷ் கூறியதாக மினு மூனீர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்தில் தான் உறுப்பினராக சேர விண்ணப்பித்திருந்ததாகவும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய நடிகர் சங்க செயலாளர் இடவேல பாபு தன்னை தன் வீட்டிற்கு அழைத்து தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘ என்னைப்போல் நிறைய பெண்கள் இந்த மாதிரி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். நான்கு நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நான் இருக்க முயன்றேன் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியாமல் நான் சென்னைக்கு ஓடி வந்தேன். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் ஏன் நடிப்பை கைவிட்டேன் என யாரும் என்னை விசாரிக்க்வில்லை. நான் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு இப்போது நீதி கேட்கப்போகிறேன். ‘ என மினு முனீர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை மினு முனீர் தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் மேலும் பல நடிகர்களின் பெயர்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.