‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று பேசமாட்டேன்’ என்று சிவகார்த்திகேயன் கூறியதன் பின்னணி என்ன?

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘கொட்டுக்காளி’. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions தயாரித்துள்ளது.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, பி.எஸ்.வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் என படக்குழு மட்டுமின்றி இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது இந்த படம் குறித்து மேடையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியதாவது, “வினோத் இயக்கிய ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதனை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன். நான் உலக சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்தவன் நான். தமிழில் வித்தியாசமாக வந்த படங்கள் தான் என்னுடைய புரிதல். பிறகு ‘கூழாங்கல்’ படத்தைப் பற்றி பேசி பேசி புரிந்து கொண்டேன்.

இந்த சூழலில் சிவகார்த்திகேயன் பேசிய “நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சொல்லி என்னை பழக்கிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என்ற பேச்சு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் நடிகர் தனுஷின் ‘3’ படத்தின் மூலமே தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார் சிவா.

இவர்களுக்குள் இருந்த ஒரு ஆழமான நட்பில் நாளடைவில் விரிசல் விழவே, தனுஷ் ரசிகர்கள் சிவாவை வசைபாடினர். அறிமுகப்படுத்தியவரை உதாசீன படுத்துவதாக ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர். அதே போல், தனியார் சேனல் ஒன்றும், சிவகார்த்திகேயனை தங்கள் வீட்டுப்பிள்ளை என்று கொண்டாடி வருகிறது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் யாரை கூறினார் என்று தற்போது இணையத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

எனினும், சிவகார்த்திகேயன் இதனை சாதாரணமாக கூறியதாகவும், இதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் சிவாவின் ரசிகர்களும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.