தென்னிந்திய படங்கள் பிடிப்பது ஏன்? ஷாருக்கானின் நச் பதில்: வாயடைத்துப்போன இந்தி சினிமா.

கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் கிரவீன் மியூசியம், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு தங்க நாணயம் வெளியிட்டு சிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஷாருக்கானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்நாளில் பாலிவுட் சினிமாவை தனது சிறந்த நடிப்பால் தலைநிமரச் செய்த ஷாருக்கானின் செயலைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அப்போது வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற ஷாருக்கானின் ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஷாருக்கானிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது தென்னிந்திய சினிமாவிற்குள், பாலிவுட்டிற்கும் இடையே இருக்கும் சில நேர்மறையான கருத்துகளை அவர் கூறினார்.

மேலும் தென்னிந்திய சினிமா பற்றிய ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் விடையளித்த விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “தொழில்நுட்ப ரீதியாக தென்னிந்திய சினிமாக்கள் மிகவும் அற்புதமானவை. பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் ஜவான் உள்ளிட்டத் திரைப்படங்கள் உலகில் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. தென்னிந்தியப் படங்களில் ஒரு குறிப்பட்ட பாணி இருக்கிறது. அதை நான் மிகவும் ரசிக்கிறேன். இது முற்றிலும் எனக்கு புதிய அனுபவமாகத் தெரிகிறது,” என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் நேரடி தென்னிந்திய படங்கள். இந்த வரிசையில் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ள ஜவான் திரைப்படம் நேரடி பாலிவுட் படமாக இருந்தாலும், இதன் இயக்குநர் மற்றும் இதில் நடித்த சில முக்கிய நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் இயக்குநர்களைத் தவிர்த்து விட்டு, தென்னிந்திய இயக்குநர் அட்லியை இவர் தேர்வு செய்தது, அப்போதைய காலகட்டத்தில் பேசுபொருளானது. ஆனால், அனைவரையும் வாயடைக்கும் படியாக ரூ.1,000 கோடி வசூலை ஈட்டி சாதனைப் படைத்தது ஜவான் படம். இதனாலேயே தென்னிந்திய சினிமாக்களை அதிகமாக ரசிக்கிறார் ஷாருக்கான்.