முருகன் இயக்கத்தில் வெற்றி மற்றும் அக்ஷயா நடிப்பில் வெளியான படம் பகலறியான்.
இந்தப் படம் ஒரே ஒரு இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகியாக வரும் அக்ஷரா தன் அப்பாவின் பேச்சை மீறி தன் காதலன் வெற்றியுடன் வீட்டை விட்டு வெளியே செல்ல துணிகிறார்.
மகளைக் காணவில்லை என்று அப்பா ஒரு பக்கம் துடி துடிக்க, அண்ணனாக வரும் இயக்குனர் முருகனோ, பெரிய ரவுடியாக இருந்தாலும் தங்கச்சியை தேடி தேடி அலைகிறார்.
இறுதியில் இவரது தங்கச்சி கிடைத்தாரா, வெற்றி தன் காதலியை கரம் பிடித்தாரா..? என்பதே படத்தின் கதை கரு.

நடிகர் வெற்றி தன்னுடைய இயல்பான நடிப்பு சுபாவத்தை மாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் என்பதை இந்த படம் காட்டுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஒரே மாதிரியான வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
சைலன்ட் கேரக்டரில் வரும் இயக்குனர் முருகன், தன்னுடைய அழகான நடிப்பினால் கதையை கட்டமைப்புக்குள் கொண்டு வருகிறார். இந்தப் படத்தின் கதையின் நாயகன் அவர்தான் என்று ஐயம் கொள்ள வைக்கிறார். இதுவரை காமெடியனாகவே பார்க்கப்பட்ட நடிகர் சாப்ளின் பாலு, இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் விவேக் சேரா
வின் இசையில் நீ ராட்சசனா பாடல் அழகாக உள்ளது.
படம் முழுக்க இரவிலேயே நடப்பதினால், ஒளிப்பதிவாளர் எதார்த்தம் எந்த இடத்திலும் மீறிவிடக்கூடாது என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும் தெரிகிறது.
இவ்வளவு நிறைகள் இருந்தும், இந்த படத்தின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது, படத்தின் திரைக்கதை தான்.
படத்தின் முதல் பாதி வரை இந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பது ஆடியன்ஸ்க்கு புரியாததனால் பெரிய குழப்பமே ஏற்பட்டு விடுகிறது.
அதன் பிறகாவது படம் ஏதாவது புரியும் என்று அமர்ந்திருந்து பார்த்தால் கடைசி 20 நிமிடத்தில் மட்டும்தான் என்ன கதை என்பதை சொல்லகிறார்கள். இதனால் ஆடியன்ஸ், அதுவரை இருந்த அந்த கியூரியாசிட்டியை குறைத்துக் கொண்டதனால் கடைசி 20 நிமிடத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கதையை திரைக்கதையும், வசனமும் மட்டுமே வலுப்படுத்தும். ஆனால் இந்த கதையில் பலவிதமான சம்பவங்கள், பல இடங்களில் நடைபெறுவதால், பலவிதமான குழப்பங்கள் மட்டுமே நமக்கு ஏற்படுகிறது.
ஆக மொத்தத்தில் பகலறியான் பெரிதாக எங்கும் அறியான்.