சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT வாத்தியாராக பணிபுரிபவர் தான் ஹிப் ஹாப் ஆதி.
ஆதி, எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்கு காரணம் அவரது அம்மா தேவதர்ஷினி, ஜாதகத்தை நம்பியதுதான்.

இந்த சமயத்தில் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ திரைப்படத்தில் பேசியது போலவே இப்படத்திலும் சமுதாய அக்கறையோடு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் தனது இயக்கத்தின் மூலம் பேசியுள்ளார்.
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் காட்டிய விதம் அருமை. Sexual Harassment என்பது ஒரு சிறு குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை, எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலமாக நிரூபித்து விட்டார்.
படத்தில் தியாகராஜன் பணக்கார வில்லனாக வந்து மிரட்டுகிறார். இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், ராஜா, தேவதர்ஷினி, வினோதினி என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் கதை ஒரு மையக் கருத்தை நோக்கியே நகர்வதால் இவர்களுடைய நடிப்பு தனியாக தெரியவில்லை.
ஆனால் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நடிகை தேவதர்ஷினி எப்பொழுதுமே மிகையாக நடிப்பவர், இந்தப் படத்தில் அளவாக நடித்திருக்கிறார். அதேபோல் நடிகை வினோதினி எப்பவுமே அளவாக நடிப்பவர், இந்தப் படத்தில் சற்று மிகையாகவே நடித்து இருக்கிறார்.
வழக்கம்போல் இல்லாமல் நடிகர் இளவரசுவின் நடிப்பு மிக மிக எதார்த்தம்.
இசையமைப்பில் ஹிப் ஹாப் ஆதிக்கு இது 25வது படம். பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.

ஒரு நல்ல படம் என்ன என்பது, ஒரு மனிதன் அந்தப் படத்தை பார்த்து வெளியே வரும் போது அதே உணர்வுடன் சென்றால் அதுதான் சிறந்த படம் என்று சுஜாதா அடிக்கடி சொல்வார். அதை இந்தப் படம் கடத்தி விடுகிறது.
ஆனால் அதையே சற்று நேரம் கழித்து யோசித்துப் பார்த்தால், உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்றும் இல்லாதது போல், இந்தக் கதையில் கடைசியாக என்ன சொல்ல வருகிறார்கள், இது எப்படி நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகும் என்று கேள்வியை எழுப்புகிறது?
கள்ளக்குறிச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு, கமர்சியல் திரை கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். ஆனால் படத்தின் முதல் பாதியை கொஞ்சம் குறைத்து இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் PT சார், பருவப் பெண்களும் ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு கதைக் கருவுள்ள படம்.