சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு

ஆர் எஸ் இன்ஃபொடைன்மென்ட் நிறுவனம், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட மற்றும் சவாலான கட்டங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடினமான சூழ்நிலைகளில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், கதையின் இயல்பையும் ஆற்றலையும் உணர்த்தும் வகையில் பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்த படம், தனித்துவமான விளையாட்டு பின்னணியில் வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படம் பின்னணி பணிகளுக்குள் நுழைந்து முழு வேகத்தில் முன்னேறி வருகிறது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்காக அவர் உடல் மற்றும் மனதளவில் தீவிரமான பயிற்சியினை செய்து தன்னை தயார் படுத்திக்கொண்டார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுஹாஸ் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், ரவீந்திர விஜய், மிதுன் மற்றும் பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை எஸ்.ஆர். கதிர் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை டி.ஆர்.கே. கிரண் மேற்கொள்ள, படத்தொகுப்பினை பிரதீப் ஈ. ராகவ் செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர்.

தற்போது எடிட்டிங், சவுண்ட் டிசைன், VFX மற்றும் இசை அமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மண்டாடி திரைப்படம், கடல் இயல்புகளை நன்கு அறிந்த தலைமை நிபுணரை குறிக்கும் சொல்லை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள இந்த படம், அடுத்த கட்ட அறிவிப்பிற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி வருகிறது.