மதுரையை திருவிழாவாக்கிய ‘கருப்பு’ இசை வெளியீடு… சித்திரை விழாவுடன் ஒப்பிட்ட சூர்யா!

இயக்குநர் RJ Balaji இயக்கத்தில், Suriya நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த விழா, சாதாரண ஆடியோ லாஞ்ச் நிகழ்வாக இல்லாமல், ஒரு கலாச்சார திருவிழா போல் ரசிகர்களின் திரளுடன் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய சூர்யா, மதுரையுடன் தன்னுடைய உணர்வுப்பூர்வமான இணைப்பை வெளிப்படுத்தியதுடன், ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழாவை மதுரையின் சித்திரை திருவிழாவுடன் ஒப்பிட்டார். “இந்த படத்தில் நான் ஹீரோ அல்ல, கருப்பசாமி தான் ஹீரோ” என கூறிய அவர், படத்தின் முதல் பாதி உணர்ச்சிவசப்படுத்தும் வகையிலும், இரண்டாம் பாதி அதிரடி நிறைந்ததாகவும் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, இரண்டு ஆண்டுகளாக எடுத்த முயற்சியின் விளைவாக உருவான இந்த படம், கருப்பசாமியின் அருளால் நடந்த பயணம் என கூறினார். சூர்யா 45 நிமிடக் கதை சொல்லலுக்கே உடனே ஒப்புக் கொண்டது தன்னம்பிக்கையை அதிகரித்ததாகவும், ‘கருப்பு’ ஒரு மாஸ் மற்றும் உள்ளடக்கமுள்ள படமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் Sai Abhyankkar, இந்த படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக கூறினார். பெரிய பட்ஜெட் படத்தில் தன்னை நம்பிய சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த அவர், இப்படத்தின் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், நட்டி நட்ராஜ், ஷிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரும் படத்தின் தரம் மற்றும் பிரம்மாண்டத்தைப் பாராட்டினர். தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ‘கருப்பு’ ஒரு முழுமையான திருவிழா அனுபவமாக இருக்கும் என கூறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் மே 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களிடையே ஏற்கனவே உருவான எதிர்பார்ப்பை, இந்த மதுரை விழா மேலும் உயர்த்தியுள்ளது.