நந்தமூரி பாலகிருஷ்ணா – கோபிசந்த் மலினேனி கூட்டணியின் புதிய வரலாற்றுப் படமான #NBK111 ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ‘வீரசிம்ஹாரெட்டி’ வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால், இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கும் இந்த படத்தில், நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் நான்காவது படம் இது.
பூஜை விழாவில் ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். இயக்குநர் பி. கோபால் க்ளாப் அடித்தார்; பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். திரைப்படத் துறையின் பல முக்கிய நபர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
வரலாற்று பின்னணியில், ஆக்ஷன்–எமோஷன் கலவையாக உருவாகும் இந்த படத்தில், பாலகிருஷ்ணா இதுவரை காணாத புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவரப்போவது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட சிறப்பு போஸ்டரில் நீண்ட கூந்தல், முழுத் தாடி, வாள், நங்கூரம் ஆகியவற்றுடன் அரச மரியாதை நிறைந்த ஒரு தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.