உங்கள் பொழுதுபோக்கிற்காக என்னைப் பற்றி பேசாதீர்கள்: நடிகை பவித்ரா லட்சுமி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நமக்கு அறிமுகமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. உல்லாசம், நாய் சேகர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு முக லட்சணமாக தெரியும் பவித்ரா லட்சுமி சமீபத்தில் தோன்றிய நிகழ்வில் உடல் எடையை இழந்து நோய் பாதிப்புக்கு ஆளானவர் போல் தென்பட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களிலும், யூடியூப் சேனல்களிலும் அவருடைய தற்போதைய தோற்றத்தை பழைய தோற்றத்துடன் ஒப்பிட்டு பவித்ரா லட்சுமிக்கு நடந்த சோகத்தை பாருங்க என அடுக்கடுக்காக கட்டுக்கதைகளை பரப்ப ஆரம்பித்தனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பவித்ரா லட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இது பற்றி என் தரப்பில் பல முறை விளக்கங்கள் கொடுக்கப்பட்டும் உடல்நலம் பற்றிய கட்டுக்கதைகள் முடிந்த பாடில்லை. தொடர்ந்து எதாவது பரவிக் கொண்டே இருக்கின்றன. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் அது, இது என பரவும் வதந்திகள் அர்த்தமற்றவை. மனிதம் இன்றி சில மோசமான கருத்துகளையும் என் பற்றி தெரிவிக்கின்றனர்.

நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நான் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன். சில பாதுகாப்பான கைகள் என்னை நன்றாக கவனித்து கொள்கின்றன. இந்த நேரத்தில் என் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்தும் நபர்களுக்கு நன்றி.

உங்களுடைய பொழுதுபோக்கிற்காக என்னை பற்றி கண்ட வதந்திகளை பரப்பாதீர்கள். என் பெயரை பயன்படுத்தாதீர்கள். எனக்கும் வாழ்க்கை எதிர்காலமும் இருக்கிறது. நான் இப்போது இருக்கும் சூழலை விட மோசமான வாழ்க்கையை உருவாக்கிவிடாதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு எது நடக்க கூடாது என நினைப்பீர்களோ அதை எனக்கும் செய்யாதீர்கள். கொஞ்சம் மரியாதை மற்றும் அன்பை மட்டுமே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இதுவரை அதை மட்டுமே நீங்கள் எனக்கு கொடுத்தீர்கள், இப்போது மாற்றி கொள்ளாதீர்கள். நீங்கள் ஆசைப்பட்ட படி மீண்டு வருவேன் என பவித்ரா லட்சுமி பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவின் மூலம் மனித தன்மையற்ற கருத்துகளை உணர்வில்லாத மனித தன்மையற்ற நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் தொடர்ந்து தவறான கருத்துகளை பதிவிட விரும்பினால் அவற்றை புறம் தள்ளவே விரும்புகிறேன்.