ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கும் இந்த நடிகர்: அப்போ படம் ஹிட்டு தான்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில், ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இரண்டாம் பாகம் அறிவிப்பு தொடர்பான வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படத்தை எடுப்பதுதான் நெல்சனின் பாணி. அப்படி உருவானதுதான் ஜெயிலர் படமும். இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த கூலி படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், இனி அவர் முழு நேரமாக ஜெயிலர் 2-வில் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபலங்களை கொண்டு ஜெயிலர் படம் உருவாகி மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது, ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ஜெயிலர் 2 படத்தில் படப்பிடிப்பில் பிரபல நடிகரான எஸ். ஜே. சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் எஸ். ஜே. சூர்யா வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் நடிக்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், வரும் மார்ச் 27ஆம் தேதி வீர தீர சூரன் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.