10 படம் தோல்வி கொடுத்தவன் நான்: இயக்குனர் சுசீந்திரன்!

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன்.

இவர் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, என நல்ல ஹிட் படங்களைக் கொடுத்தார். பின், அவரது படங்கள் சில தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 2கே கிட்ஸ்களின் காதல், உணர்ச்சி, உறவு சிக்கல்களை மையப்படுத்தி 2கே லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் புரொமோஷன்களுக்காக அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார்.

அந்தப் பேட்டியில் “நான் வெண்ணிலா கபடிக்குழு படம் முடிச்சதுமே எழுதுன ஸ்கிரிப்ட்ன்னா அது அழகர் சாமியின் குதிரை தான். வெண்ணிலா கபடிக்குழு படம் ஹிட் ஆனாலும் எனக்கு ரெண்டாவது படத்துக்கு புரொடியூசர் கிடைக்கல. ஏன்னா நான் அப்பு குட்டி தான் ஹீரோன்னு தெளிவா இருந்தேன்.

அதுக்கு அப்புறம் தான் நான் கார்த்தி வச்சு படம் பண்ணுனேன். அந்த படம் ஹிட் ஆனதும் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு புரொடியூசர் கிடைச்சாங்க. அப்புறம் ஒரு பெரிய படம் ஒரு சின்னப் படம்ன்னு அடுத்தடுத்து வந்தது. எதுவும் நான் பிளான் பண்ணல. அதுவா அமைஞ்சது தான்.

என்னைப் பொறுத்த வரை வெற்றிங்குறது போட்ட காச விட ஒரு ரூபா அதிகமா கிடைச்சாலும் அது வெற்றி தான். அழகர் சாமியின் குதிரை படம் முடிஞ்ச சமயத்துல நான் யோசிச்சிருக்கேன். ஒரு படம் தோல்வி அடைஞ்சா எப்படி இருக்கும்ன்னு. ஏதாவது ஒரு படத்துல தோல்வி அடையணும்ன்னு நெனச்சேன். ஆனா பத்து படம் தோல்வி படமா கொடுப்பேன்னு நான் எதிர்பாக்கல. நான் என்ன தான் என்னோட அடுத்தடுத்த வேலைய பாத்துட்டு போயிட்டு இருந்தாலும் அந்த தோல்வியோட வலி இருந்துட்டு தான் இருக்கும்.

என்னோட படம் எல்லாம் ஹிட் ஆனதுக்கு காரணம் நான் எதுக்காவும் காம்ரமைஸ் செய்ய மாட்டேன். எல்லா விஷயத்திலயும் பிடிவாதமா இருப்பேன். நாம நெனச்சத ஸ்கிரீன்ல கொண்டு வர போராடுனேன். ஆனா இந்த கடைசி பத்து வருஷத்துல என்கிட்ட இருந்த அந்த பிடிவாத குணம் என்ன விட்டு எனக்கே தெரியாம போயிடுச்சு. எல்லாத்தும் ஓகே சொல்ல ஆரம்பிச்சுட்டேன். அதுதான் என் தோல்விக்கு காரணம். நான் எப்போவும் ஜாலியா இருக்க ஆள். ஆனா அதுவும் எனக்கே தெரியாம போயிடுச்சு.

ஒரு இயக்குநரோ வெற்றி படைப்புல மட்டும் இல்ல. நாயகர்களையும், நடிகர்களையும் உருவாக்கி விடுறோம். அவங்களோட ஒவ்வொரு வெற்றியும் அவங்களுக்கான கைதட்டல்களும் என்னோட பேரை சொல்லும். நாளைக்கு நான் சினிமாவில இல்லன்னாலும் நான் உருவாக்கிவிட்ட விஷ்ணு விஷாலோ, சூரியோ, விஜய் சேதுபதியோ என் பேர் சொல்லும் போது அங்கு நான் ஜெயிக்கிறேன். அவங்க என்ன அடையாளப்படுத்திட்டே இருப்பாங்க.

எந்த டைரக்டராவது 10 பிளாப் படத்த குடுத்துட்டு மறுபடியும் மறுபடியும் படம் பண்ண முடியுமா?. ஆனா என்னால அது முடியுதுன்னா ஆரம்பத்துல நாம கொடுத்த வெற்றி படங்கள் தான். இவன்கிட்ட ஒரு நல்ல கதை கிடச்சா கம்பேக் தர முடியும்ன்னு நெனக்குறாங்க. நானும் அதைத் தான் நெனக்குறேன்.” என மிகவும் பாசிட்டிவ்வாக பேசினார்.