நேசிப்பாயா திரை விமர்சனம்

சரத்குமார், குஷ்பூ, ராஜா, ஆகாஷ் முரளி, அதீதி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

காதலர்களான ஆகாஷ் முரளி அதீதிக்கும் இடையே ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக, அதீதி சங்கர் போர்ச்சுக்கல்லுக்கு வேலை நிமித்தமாக சென்று விடுகிறார். ஆனால் அந்த ஊரிலேயே பெரும் தொழிலதிபரான சரத்குமாரின் பையன் கொலைக்கு இவர்தான் காரணம் என்று ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இதனை அறிந்த காதலனான ஆகாஷ் முரளி எப்படி அதீதி சங்கரை பிரச்சனையிலிருந்து எப்படி மீட்டெடுத்தார் என்று சொல்வது தான் நேசிப்பாயா படத்தின் கதை.

கல்கி கோச்சலின் ஹிந்தியில் மிகப்பெரிய நடிகை,பாண்டிச்சேரி காரப்பெண், தமிழ் நன்றாகத் தெரியும். அவரிடம் இருந்து இன்னும் சிறப்பான நடிப்பை வாங்கி இருந்திருக்கலாம். சரத்குமார் தன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். நீண்ட நாளுக்குப் பிறகு நடிகர் ராஜாவின் வில்லத்தனத்தை திரையில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதேபோல் குஷ்பூவும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். புருஷ லட்சணம் படத்தில் நடித்த குஷ்பூவை இந்தப் படத்திலும் கொஞ்சம் பார்க்கலாம். ஆகாஷ் முரளி நடிப்பில் சோடை போகவில்லை. அதீதி சங்கர் தன் நடிப்பை இன்னும் உணர்ந்து நடித்திருக்கலாம்.

இந்தப் படத்தின் முதல் பாதி வழக்கமான காதல் கதையாகவே செல்கிறது. இரண்டாம் பாதி கதையில் தான் சூடு பிடிக்கிறது நிறைய திருப்பங்களும் கானக் கிடைக்கின்றன. ஆக திரைக்கதையில் விறுவிறுப்பை இன்னும் சற்று கூட்டி இருந்திருக்கலாம்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு, போர்ச்சுகல் நாட்டை ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் தன்னுடைய “மிஷன் இம்பாசிபிள்” படத்தில் கூட இப்படி காட்டியிருக்க மாட்டார் ஆனால் தமிழ் சினிமாவில் மிகவும் அழகாகவும் ரம்யமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்டி இருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. ஆனால் பாடல்கள் சுமார் ரகம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு காதல் கதையை கையில் எடுத்திருக்கும் விஷ்ணுவரதன் இன்னும் கொஞ்சம் திரைகதையில் சிறப்பு கூட்டி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆக மொத்தத்தில் நேசிப்பாயா திரைக்கதை அழுத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ‘யோசிப்பாயா’ என்று கூறாமல் பார்த்து இருந்திருக்கலாம்.