நண்பன் விஷாலை மீட்டெடுக்க, களம் இறங்கிய நடிகர் ஆர்யா!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் விஷால். 12 ஆண்டுகளாக முடங்கி கிடந்த அவரது படம் ஒன்று, வருகிற பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் மதகஜ ராஜா என்ற அந்த படத்தில் நடிகர் விஷாலுடன் சந்தானம் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சோனா சூட் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நடிகர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். விஷால் சொந்தக்குரலில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

மதகஜ ராஜா படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சுந்தர் சி குஷ்பு விஜய் ஆண்டனி விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நடிகர் விஷால் உடல் மெலிந்த நிலையில், பலத்த கை நடுக்கத்துடன் மைக் பிடித்து பேசியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகர் விஷால் 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தவர். அவரது வயது 47 என்ற நிலையில், 70 வயது முதியவர் போல காணப்பட்ட அவரது பலவீனமான தோற்றத்தால் பலரும் கலங்கிப் போயினர். அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி கூறி சமாளித்தார். ஆனால் அவரை குஷ்பு உள்ளிட்ட சிலர் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் விஷாலின் மிக நெருங்கிய நண்பர் ஆர்யா. இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மும்பையில் இருந்த ஆர்யா, விஷாலின் வீடியோ பார்த்தவுடன் தன் நண்பனை காண சென்னைக்கு உடனடியாக சென்னை திரும்பியிருக்கிறார்.

நடிகர் விஷால் தன்னுடைய அறையை பூட்டிக்கொண்டு வாரக்கணக்கில் உள்ளேயே இருப்பதும் படுத்து தூங்குவதும், தூக்கமின்றி 2 நாட்கள் 3 நாட்கள் என விழித்திருப்பதும் என பல விதங்களில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக ஆர்யா உள்ளிட்ட சில நெருக்கமான நண்பர்கள் விஷாலை அவரது வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்துள்ளனர்.

முதலில் அவரை மனரீதியாக ரிலாக்ஸ் செய்து நோய் பாதிப்பில் இருந்து மீட்பது, தேவையான மருத்துவ சிகிச்சைகள் ஆரோக்கியமான தூக்கம் என அவரது உடல் நலத்தை மீட்டு எடுப்பது என்ற முடிவில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆர்யா விஷாலுடன் இருந்து அவரை பழைய விஷாலாக மாற்ற தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறார்.