சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா 2: தி ரூல் 5 வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் புஷ்பா 2 திரைப்படம் 5 ஆவது திங்களான நேற்றைய தினம் மிக குறைந்த வசூலையே ஈட்டி இருக்கிறது. இந்த வசூல் கணக்கில் சென்றால், புஷ்பா 2 திரைப்படம் நிச்சயமாக அமீர்கான் நடித்து வெளியான தங்கல் படத்தின் வசூலை நிச்சயமாக முறியடிக்க முடியாது என்பது தெரிய வந்திருக்கிறது.
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, புஷ்பா 2 திரைப்படம் 33 வது நாளில் ரூ2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இந்த வசூலானது 65.28 சதவீத சரிவை குறிக்கிறது. இந்தியாவில் மொத்தமாக 1441 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் அதிகம் வசூல் திரைப்படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது. இதில், தெலுங்கில் ரூ.335.41 கோடியும், ஹிந்தியில் ரூ.793.2 கோடியும், தமிழில் ரூ.58.21 கோடியும், கன்னடத்தில் ரூ.7.73 கோடியும், மலையாளத்தில் ரூ.14.15 கோடியும் இந்தப்படம் வசூல் செய்திருக்கிறது.
32 நாட்களில் உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் 1831 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது; முன்னதாக பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் 1788 கோடி வசூல் செய்திருந்தது; அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் 2070 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்திய திரைப்பட வசூலில் முதலிடத்தில் இருக்கும் தங்கல் திரைப்படத்தின் வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் 239 கோடி ரூபாய் தேவை என்பது தெரிய வந்திருக்கிறது.