விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் அதிரடியாக ஆளுங்கட்சி திமுகவை ஊழல் ஆட்சி என்று விமர்சித்து பேசினார். மக்களுக்கு நல்ல உணவு, இருப்பிடம், வேலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராத ஒரு ஆட்சி இருந்தால் என்ன, போனால் என்ன என்று காட்டமாக திமுக அரசை விமர்சித்தார்.
திராவிட மாடல் என மக்களை ஏமாற்றி, ஊழல் செய்து குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை விரட்டுவோம் என்பதுதான் தவெக நடத்திய அரசியல் மாநாட்டில் முக்கிய அறிவிப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பணபலம், படை பலம், செல்வாக்கு மிக்க ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் தற்போது நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. இன்னும் சினிமாவில் விஜய் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இப்போது விஜய் நடிப்பில் தளபதி 69 படம் உருவாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய், திமுகவை தன்னுடைய அரசியல் எதிரி என எதிர்ப்பதால் தளபதி 69 படம் ரிலீஸ் ஆகும்போது திமுக தரப்பில் முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனெனில் திமுக இதுபோன்ற குளறுபடிகளை, முட்டுக்கட்டைகளை போடுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் தளபதி 69 படத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் திமுக அரசை தைரியமாக விஜய் எதிர்த்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் தளபதி 69 படம் ரிலீஸ் ஆகிறது. 2026 மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பட்சத்தில், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லாம் தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில் விஜய் படத்துக்கு திமுக தரப்பில் தொந்தரவு, இடையூறு செய்தால் அது நிச்சயமாக விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் மாறும். அதனால் விஜய் படத்தை எந்தவித சிக்கலும் இல்லாமல், ஓடவிட்டால்தான் திமுகவுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும். அதனால்தான் இவர்களால் இனி ஒன்றும் நம்மை செய்ய முடியாது என்ற தைரியத்தில், விஜய் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.